கோவை: தமிழக அரசின் அநியாயமான பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கோவையில் திங்களன்று மாதர் சங்கத்தினர் வாக்கெடுப்பு நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு கடந்த வெள்ளியன்று அதிரடியாக பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது. இந்த கட்டண உயர்விற்கெதிராக தமிழகமெங்கும் பொதுமக்கள் தன்னெழுச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர், மாணவர், மாதர் சங்க அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ஆனால் தமிழக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மக்கள் இந்த கட்டண உயர்வை ஏற்றுக்கொள்கிறார்கள் என திரும்பத்திரும்ப பேசிவருகிறார்கள். இந்நிலையில் மக்களுடைய அதிர்ப்த்தியை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வாக்கெடுப்பு இயக்கம் திங்களன்று கோவை அரசு மருத்துவமனையின் முன்பு நடைபெற்றது.

இந்த இயக்கத்தில் பேருந்து கட்டண உயர்வு நியாயம், அநியாயம் என இரண்டு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு பொதுமக்களிடம் வாக்கு சீட்டுகள் தரப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். குறிப்பாக வாக்களித்த அனைவருமே அநியாயம் என்கிற வாக்குப்பெட்டிக்குள்ளேயே தங்களது வாக்குகளை அளித்தனர். வயித்துல ஈரத்துணிய கட்டி உசுரு பிழைக்கிறதா இதனிடையே சரஸ்வதி என்கிற பெண்மணி அநியாயமா பஸ் விலையை ஏத்தியிருக்காங்க நீங்க நியாயம்னு ஒரு பெட்டிய எதுக்கு வச்சிருக்கிங்க என்று கேட்டு அதனை எட்டி உதைத்து மாதர் சங்கத்தினரிடம் வாக்குவாத்த்தில் ஈடுபட்டார். மேலும், அவர் கூறுகையில், இந்த மொண்டிக்கால வச்சிகிட்டு நூறு ரூபா சம்பாதிச்சு வயித்த கழுவிறேன். அதுகூட பொருக்காதுன்னு ஐம்பது ரூபா பஸ் விலைய உயர்த்தினா எங்க வயித்துல ஈரத்துணிய கட்டிகிட்டுத்தான் வாழனும். நான் ஒரு ஓட்டு மட்டும்போடமாட்டேன் அத்தனை சீட்டை கொடுங்க நானே எல்லாத்தையும் போடுறேன் என ஆவேசமாக பேசினார். இதேபோன்றே ஏராளமான பொதுமக்கள் வாக்கு சீட்டுகளை பெற்றுக்கொண்டு தமிழக அரசிற்கெதிராக தங்களின் கோபத்தை வார்த்தைகளால் வெடித்தனர்.

இதனையடுத்து மாதர் சங்கத்தினர் காந்திப்பார்க் பகுதியில் மாலையில் வாக்குப்பெட்டியை வைத்து பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தினர். இதுகுறித்து மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா கூறியதாவது:- பொதுமக்களிடம் பெற்ற வாக்குகளை தமிழக முதல்வருக்கு அனுப்ப உள்ளோம். அரசு உடனடியாக கட்டண உயர்வை திரும்பப்பெறவில்லையென்றால் அடுத்தடுத்த போராட்டத்தை தீவிரப்படுத்தி அரசை ஸ்தம்பிக்கவைப்போம் என்றார். இந்த போராட்டத்தில் மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அமுதா, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி மற்றும் பங்கஜவல்லி, சமுன்டீஸ்வரி, மெகரூன்னிசா உள்ளிட்ட மாதர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.