வெலிங்டன்;
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வெலிங்டனில் இன்று தொடங்கியது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பகர் சமான், உமர் அமின் ஆகியோர்  களமிறங்கினார்கள்.நியூசிலாந்து அணியின் வேக்கப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்னில் வெளியேற பாகிஸ்தான் அணி 35 ரன் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இளம் நட்சத்திரம் பாபர் அசாம் 41 ரன்களும், வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 23 ரன்கள் எடுத்து கைகொடுக்க பாகிஸ்தான் அணி 19.4 ஓவரில் 105 ரன்களில் சுருண்டது.இந்த ஆட்டத்தில் பாபர் அசாம்,ஹசன் அலி மட்டுமே இரட்டை இலக்க ரன்களை தண்டியுள்ளனர்.மற்ற 9 ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்கங்களிலே பெவிலியன் திரும்பியுள்ளனர்.நியூசிலாந்து அணி தரப்பில் ரென்ஸ், சவுத்தி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 2ரன் எடுத்த நிலையில் ரயிஸ் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த பிலிப்ஸ் 3 ரன்னில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 8 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த காலின் முன்ரோ- ப்ரூஸ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் களமிறங்கியது.மிகவும் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் ப்ரூஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க 4-வது விக்கெட்டுக்கு காலின் முன்ரோ உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.இறுதியில் நியூசிலாந்து 15.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 49 ரன்கள் எடுத்த காலின் முன்ரோ ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஆக்லாந்ந்து மைதானத்தில் வரும் 25-ஆம் தேதி (வியாழனன்று) நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.