உதகமண்டலம்;
நிலக்கரி மற்றும் உருக்குத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பொதுத்துறை நிறுவனங்களின் ஆய்விற்காக உதகைக்கு வருகை தந்துள்ளது. ஜனவரி 22,23 தேதிகளில் நடைபெறும் நிலைக்குழு கூட்டத்தில் இந்திய உருக்கு ஆணையம் மற்றும் விசாகப்பட்டினம் உருக்கு ஆலைகளைப்பற்றி ஆய்வு செய்கிறார்கள். இந்த நிலைக்குழுவிற்கு (உருக்கு மற்றும் நிலக்கரி) ராகேஷ் சிங் எம்.பி., தலைவராகவும் மற்றும் மக்களவை மற்றும் மாநிலங்கள
வையை சேர்ந்த 28 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர். நிலைக்குழு தலைவர் ராகேஷ் சிங்கை சேலம் உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தொழிற்சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து சேலம் உருக்காலை தனியார்மய முயற்சிகள்
கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

சேலம் உருக்காலையில் உற்பத்தி மற்றும் நிதி செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக நடப்பு நிதி ஆண்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வரிக்கு முந்தைய இலாபத்தை சேலம் உருக்காலை ஈட்டியுள்ளது எனவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் சேலம் உருக்காலை செயல்பாட்டிற்கு தேவையான உரிய செயல் மூலதனம் மற்றும் மூலப்பொருட்கள் குறித்த காலத்தில் உத்தரவாதம் செய்யப்படவேண்டும் எனவும் கோரினர்.

சேலம் உருக்காலையின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் ரூபாய் 15 ஆயிரம் கோடி எனவும், சேலம் உருக்காலைக்கு நான்காயிரம் ஏக்கர் நிலங்களை விவசாயிகள் பொதுத்துறை நிறுவனம் அமைவதற்காக வழங்கியுள்ளார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசோ சேலம் உருக்காலையின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்குமான நடவடிக்கைக்கு மாறாக, சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் முடிவு என்பது தமிழகத்தின் நலனுக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக்கொண்ட நிலைக்குழு தலைவர் ராகேஷ் சிங், சேலம் உருக்காலையின் தனியார் மய முடிவு மற்றும் அதன் வளர்ச்சி குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு
கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் சேலம் உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பின் நிர்வாகிகள் கே.பி. சுரேஷ் குமார், ஆர்.இராமலிங்கம், என்.மாணிக்கம், வி.முருகன், வெங்கடாஜலம் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக ஞாயிறன்று சேலத்திற்கு வருகை தந்த கடலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் உருக்கு மற்றும் நிலக்கரி நாடாளுமன்ற நிலைக்குழு
உறுப்பினருமான அருண்மொழித்தேவனை சேலம் உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர். வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சேலம் உருக்காலை தனியார்மயம் குறித்து உரிய தலையீடு செய்வதாகவும் தமிழக முதல்வர் சேலம் உருக்காலையின் தனியார்மயத்தை தடுத்திட உரிய கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.