திருச்சி மாநகர மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்துக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. மத்திய மோடி அரசு ஆட்சி பொறுப்பிற்கு வந்ததன் பிறகு பல்வேறு வெற்றுக் கோசங்களுடன் அறிவிப்பு செய்த திட்டங்களில் ஒன்றுதான் தூய்மை இந்தியா திட்டம்.

இந்த திட்டத்திற்காக 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி செலவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இல்லாத குப்பையை கூட்டுவது போல் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் விளம்பரங்களுக்கு மட்டும் ஆண்டு தோறும் 94 கோடி ரூபாய் செலவுசெய்யப்பட்டு வருகிறது.

திட்டத்தை அமுலாக்கிடும் வகையில் ஆண்டு தோறும் சுவஜ் சர்வக்ஷன் குழு நாட்டிலுள்ள 29 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளடங்கிய நகரங்களில் திடக்கழிவு மேலாண்மை, சாக்கடைகள் பராமரிப்பு, குடிநீர் தரம், வெளியிடங்களில் மனித கழிவுகள், தொற்றுநோய் போன்றவற்றில் தூய்மை பேணிடும் நகரங்களை ஆய்வுசெய்து நகரங்களை தரவரிசை பட்டியல்படுத்தி 10 சிறந்த தூய்மை நகரங்களுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் தூய்மை நகரபட்டியலில்,
2014-2015-ஆம் ஆண்டு சர்வேயில் திருச்சி மாநகராட்சி (2-ஆம் இடம்)
2015-2016-ஆம் ஆண்டு சர்வேயில் திருச்சி மாநகராட்சி தொடர்ந்து (2-ஆம் இடம்)
2016-2017-ஆம் ஆண்டு சர்வேயில் திருச்சி (6-ஆம் இடம்) பெற்றுள்ளது.
திருச்சி மாநகராட்சி மக்களுக்கு ஒரே அதிர்ச்சி. விருது பெற தரம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாய் சொல்லப்பட்டுள்ளதில், எவற்றையும் சரியாக கையாளாகாத மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதன் அடிப்படையில் விருது வழங்கப்பட்டதென குழப்பம் மேலோங்கி நிற்கிறது.

திடக்கழிவுமேலாண்மை :
மாநகராட்சியின் வார்டுகளில் சுகாதார பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட துப்புரவு ஊழியர்கள்
இல்லை. அரசாணை 1996 -ஆம் ஆண்டின் படி 1000 நபர்களுக்கு 3 துப்புரவுபணியாளர்கள் என்ற
விகிதத்தில் பணியமர்த்தப்பட வேண்டும் என்கிற அரசாணை கூட அமுலாக்கப்படாமல் 12000 வாக்காளர்களை கொண்டுள்ள மாநகராட்சி வார்டுகளிலேயே 10க்கும் குறைவான துப்புரவு பணியாளர்களே பணியில் உள்ளனர். அதே போல நேரடியாக மக்களிடம் குப்பை பெறும் திட்டம் அறிமுகப்படுத்தி அனைத்து வார்டுகளிலும் செயலாக்கப்படுவதில்லை. இந்த குப்பை சேகரிப்பிற்காக -வரி என்பது மக்கள் தலையில் இடியாய் விழுந்துள்ளது. மாநகரில் 65 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அரியமங்கலம் எனும் பகுதியில் குப்பை கிடங்கில் கொட்டி மலைபோல தேக்கி வைத்து எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் எரிமலையாக ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை மாதக்கணக்கில் தீ பிடித்து 10 கி.மீ. சுற்றளவிற்கு புகைகளை கக்கி மக்களுக்கு கண் எரிச்சலும், சுவாச கோளாறும் ஏற்படுத்தி வருகின்றன.

தற்போது வார்டுகளுக்குள்ளாகவே மக்கும்- மக்கா குப்பை உரக்கிடங்கு என குடியிருப்பு
பகுதிக்குள்ளேயே குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட்டு பல விதமான நோய்களும்,துர்நாற்றமும் பரவி வருவது மக்களிடையே எதிர்ப்புகள் அதிகமாகி போராட்டங்களும் பெருக துவங்கியுள்ளது.

சாக்கடைபராமரிப்பு :
மேலே குறிப்பிட்டது போல ஊழியர்கள் பற்றாக்குறையால் சாக்கடைகளை தூர்வாரி சுத்தம் செய்யும் ஏற்பாடுகள் கிடையாது. ஒரு நாள் மழைக்கே மாநகரில் பல இடங்களில் மழைநீரும் சாக்கடைநீரும் கலந்து சாலையில் இடுப்பளவு நீர் சூழும் பகுதிகளாக உள்ளன. மேலும் மாநகரின் சாக்கடைகழிவு நீர்கள் அனைத்தும் 1000 ஆண்டு பழமையான காவேரியின் கிளை வாய்க்கலான உய்யக்கொண்டான் வாய்க்காலில் கலப்பதால் சுற்றுச்சூழல் மாசு மற்றும் விவசாயத்திற்கும் நீரைபயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சியின் கூவமாக மாறிவருகிறது.

அதே போல் ஒரு சில வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் ஓடும் அவலமும் பாதாள சாக்கடைஅடைப்பை நீக்க நவீன கருவிகளை போதுமான அளவில் இல்லாமல் மனிதர்களே இறங்கி சுத்தம் செய்யும் கொடுமை நீடிக்கிறது. பாதாள சாக்கடை உந்து நிலையம், சுத்திகரிப்பு மையங்கள் செய்யப்படாமல் கழிவுநீர் அப்படியே குளங்களில் விடுவதால் பஞ்சப்பூர் பகுதியின் நிலத்தடி நீர் மாசு அடைந்து சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகமான கொசுக்கள் உற்பத்திக்கு வாய்ப்பாகவும் உள்ளது.

குடிநீர் தரம் :
காவேரி ஓடும் திருச்சி மாநகரில் பல முறை தண்ணீ ர் பஞ்சம் ஏற்படுகிறது. அப்படியே குடிநீர் வந்தாலும் பல இடங்களில் குடிநீரில் சாக்கடைகலந்து கலங்கலாக மண் நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் குடிநீர் வரும் நிலையே. துர்நாற்றத்துடனும் குடிநீர் வரும் நிலையும் உள்ளது.

வெளியிடங்களில் மனித கழிவுகள் :
தமிழகத்தின் மையப்பகுதி திருச்சி என்பதால் பல மாவட்டமக்கள் திருச்சியின் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையங்கள் வந்திருக்கக் கூடும். பேருந்தில் களைத்து தூங்கி விட்டால் கூட பேருந்து நிலையத்தில் வீசும் சிறுநீர் துர்நாற்ற நெடி உங்களை எழுப்பி வரவேற்கும் பேருந்து நிலையங்கள். தமிழகத்திலேயே திருச்சியில் தான் 450 க்கும் மேற்பட்டகழிப்பிடம் உள்ளதாம். கட்டண கழிவறைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடகூடுதலாக வசூலிப்பதோடு தாழ்ப்பாள் இல்லாத கதவும், தண்ணீ ர் இல்லாத குழாயுமாக, சுத்தம் சுத்தமாக இல்லாத கழிவறைகளாகவே உள்ளன.

தொற்று நோய்கள் :
சுகாதார கேடுகளின் காரணமாக பல்வேறு தொற்று நோய்களும் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களும் நிறைந்தே காணப்படுகிறது.

மாநகராட்சியின் நோக்கம் விருது மட்டுமே :
மாநகரின் நிலைமை இவ்வாறு சீர்கெட்டு இருக்க திருச்சி மாநகராட்சி தூய்மை நகரங்களின்
வரிசையில் எவ்வாறு இடம் பெற்றது என்ற மர்மத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. திருச்சி மாநகராட்சி ஆணையர் கலந்து கொண்டு பேசிய கூட்டத்தில் கடந்த ஆண்டுகளில் மாநகராட்சி தூய்மை நகரபட்டியலில் இடம் பிடித்தது. எப்படியயன்றால் சுவஜ் சர்வக்ஷன் குழு மக்களிடம் தொலைபேசியின் மூலம் கேள்வி கேட்கப்பட்டு அதன்மூலம் அளிக்கும் விடையின் அடிப்படையிலேயே மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 2000 தொலைபேசி எண்களை மாநகராட்சிக்கு சாதகமாக பதிலளிக்கும் வகையில் மாநகராட்சி ஊழியர்கள், சில தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகள், சில கல்லூரிகள் போன்றவர்களின் தொடர்பு எண்களை பெற்று அவர்களுக்கு பயிற்சி அளித்து அதனடிப்படையிலேயே தூய்மை நகரமென விருது வாங்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு விருது பெறுவதற்கு மாநகரின் மக்களின் யாருக்கு வேண்டுமானாலும் கேள்வி
கேட்கப்படஉள்ளதாம். அவை என்ன 6 கேள்விகள்.
1. தூய்மை நகரகணக்கெடுப்பில் உங்கள் மாநகராட்சி பங்கேற்றுள்ளது தெரியுமா?
2. கடந்த ஆண்டைவிடநகரம் தூய்மையாக உள்ளதா?
3. பொது இடங்களில் குப்பை தொட்டி உள்ளதா?
4. வீடுதோறும் குப்பை சேகரிக்கும் திட்டம் திருப்தியாக உள்ளதா?
5. கழிப்பிடங்கள் (பொது) தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா?
6. வெளியிடங்களில் மனித கழிவுகள் இல்லாமல் தூய்மையாக உள்ளதா?
என்று கேள்வி கேட்கப்படும். நிறைவாக பதிலளித்தால் 175 மதிப்பெண் சுமார் என்றால் 135
மதிப்பெண், ஓரளவு என்றால் 90 மதிப்பெண், பரவாயில்லை என்றால் 45 மதிப்பெண், இல்லை
என்றால் 0 மதிப்பெண்ணாம்.

இவற்றை மாநகரஆணையர் பட்டியலிட்டு தங்களுக்கு இது குறித்து அழைப்பு வந்தால் நன்றாக
இருக்கிறது, தூய்மையாக இருக்கிறதென பதில் அளியுங்கள். நண்பர்கள், குடும்பத்தினர்
அனைவரிடமும் பகிருங்கள். திருச்சி மாநகராட்சி விருது பெறுவது அனைவருக்கும் பெருமையயன உண்மையை மறைத்து உணர்வை தூண்டிவிட்டு மக்களுக்கு உண்மையான தூய்மையையும், சுகாதாரத்தையும் தருவதற்கு பதிலாக கேள்விகளுக்கு பதில் சொல்லியே முதலிடத்தை பெற துடிப்பதை பார்த்தால் புள்ளையார் மாங்கனி பெற்ற கதை போல் மாநகராட்சியின் வெற்று முழக்கம் தான் இவை.

விருது பெற மக்களை கேள்விக்கு பதிலளிக்க தயார் செய்ய பல லட்சம் துண்டு பிரசுரம், விளம்பரம்,புகழ்பெற்ற பிரபலங்களை விளம்பரதூதுவர்களாக நியமித்து பிரச்சாரம் செய்து கொண்டுள்ளது.

மக்கள் சுகாதாரபிரச்சனை தீர்வுகாண :
மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி பணிகளை மேற்கொள்ள ஊழியர்களை நியமிப்பது,தேவையான நிதி பெற்று சுகாதாரமேம்பாட்டிற்கு வழிகோலினால் மக்களே மாநகராட்சியின் சிறப்பை சொல்லுவார்களே. விளம்பரங்கள் தேவையில்லை.

மத்திய, மாநில ஆட்சிகள் :
உள்ளாட்சி தேர்தலை ஆளும் ஆட்சியாளர்களின் கோஷ்டி பூசலால் இரட்டைஇலை சின்னம் பிரச்சனை, நீதிமன்ற வழக்குகள் காரணம் காட்டி இழுத்தடிப்பு செய்து உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மக்களுக்கு நேரடியாக சேவை வழங்கி வரும் உள்ளாட்சி நிர்வாகம் முடங்கிபோயுள்ளது. இதனால் டெங்கு காய்ச்சலால் தினம் தினம் மக்கள் பலியாகியதும், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.4000 கோடியை தரமறுத்து வருவதால் மாநிலம் முழுவதும் உள்ளாட்சி துறை சார்ந்த சுகாதாரபணிகள் தடைப்பட்டுள்ளது.

மத்திய அரசு சுகாதாரபணியாளர்களை நிரந்தரப்படுத்தி முறையான ஊதியம் வழங்கிடவும், உள்
கட்டமைப்புகளை உருவாக்க நிதி ஒதுக்குவதோடும், மக்களின் பொருளாதாரம் உயர்ந்தால் தூய்மையும் உயரும், தூய்மைக்கும் பொருளாதாரத்திற்கும் தான் சம்மந்தம். மக்களுக்கு பொருளாதாரசுதந்திரம் அடையாமல் சுத்தம் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. எனவே தூய்மை இந்தியா என்ற வெற்று கோசங்களை விடுத்து மக்கள் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வழி கோலுவதே உண்மையான தூய்மை இந்தியா உருவாக்க முடியுமே தவிரவிளம்பரங்களால் அல்ல…
பா.லெனின்
மாவட்டசெயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
திருச்சி மாநகர் மாவட்டம், செல் : 98424 08000

Leave a Reply

You must be logged in to post a comment.