மேட்டுப்பாளையம், ஜன.22-
மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழைந்த 15 யானைகள் கொண்ட கூட்டத்தால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள குரும்பனூர் என்னும் கிராமத்தினுள் திங்களன்று அதிகாலை காட்டு யானைக் கூட்டமொன்று நுழைந்தது. நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 15 யானைகள் கொண்ட இந்த யானைக் கூட்டம் ஊருக்குள் நுழைந்து அங்கிருந்த பிளைவுட் தொழிற்சாலை பின்புறம் முகாமிட்டது. இதனால் அச்சமுற்ற அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளே முடங்கினர். இதன்பின் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து குரும்பனூர் கிராமத்திற்கு சென்ற வனத்துறையினர் மூன்று குழுக்களாக பிரிந்து தொழிற்சாலை பின்புறம் நின்றிருந்த யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர். முன்னதாக, தொழிற்சாலைக்குள் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்த வனத்துறையினர் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்தபடி யானைகளை ஊரைத்தாண்டி கொண்டு சென்றனர். குறிப்பாக, காட்டு யானைகள் இருந்த இடத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் கோவில் யானைக்களுக்கான முகாம் நடைபெற்று வருகிறது. ஆகவே, இவற்றை விரட்டும் பணியின் போது அவை நலவாழ்வு முகாமிற்குள் சென்று விடாதபடி மிக கவனமாக இப்பணியினை மேற்கொண்டனர். சுமார் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின்
னர் யானைக்கூட்டம் அருகில் இருந்த நெல்லிமலை காட்டிற்குள் சென்றது.

இவை மீண்டும் திரும்பி வரலாம் என்பதால் இவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்க தனி வனக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: