புதுதில்லி;
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்வதில் தலைமைத் தேர்தல் ஆணையம் காட்டிய அவசரம், ஆணையத்தின் மீது சந்தேக நிழல்களை அதிகரிக்கச் செய்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 20 பேர், சட்டமன்ற செயலர்கள் என்ற பெயரிலான ஆதாயம் தரும் பதவியை வகித்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் அவசர அவசரமாக அவர்களை தகுதிநீக்கம் செய்திட தலைமைத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இதற்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து 20 பேரின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்பாட்டை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. ஒருபுறம் போராட்டத்திலும், மறுபுறம் இந்த முடிவை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்து எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி.
இந்நிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், ஆதாயம் தரும் பதவியில் இருந்ததாக கூறி அவசர கதியில் அவர்களது பதவியை பறித்துள்ள செயலானது இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை நிகழாதது என்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு விமர்சித்துள்ளது.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மீது எழுந்த குற்றச்சாட்டைப் போலவே ஹரியானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

அதுதொடர்பான மனுக்கள் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆணையம், ஆம் ஆத்மி உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டை உடனடியாக எடுத்துக் கொண்டது சந்தேகத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது. மேற்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையா எனவும் மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த சில ஆண்டுகாலமாகவே தேர்தல் ஆணையத்தின் மீதான சந்தேக நிழல் அதிகரித்துள்ளது என்றும், சமீபத்தில் குஜராத் தேர்தலில் இதேபோன்ற அணுகுமுறையை ஆணையம் பின்பற்றியது கவனிக்கத்தக்கது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.எந்தவிதமான கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபடாத சட்டமன்ற உறுப்பினர்களை, அவர்கள் ஆதாயம் தரும் பதவியில் இருந்ததாக எழுந்த ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் மட்டுமே உடனடியாக தகுதி நீக்குவது ஜனநாயக படுகொலை என்றே கருதப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது. ஆதாயம் தரும் பதவி என்ற பதத்தின் பொருள் என்ன என்பதை மறு வரையறை செய்யவேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும், இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டுமென்றும் கட்சியின் தில்லி மாநிலக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.