பேருந்து கட்டண உயர்வை தொடர்ந்து சென்னை மாநகர பேருந்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ரூ. 50 கட்டணம் கொண்ட தினசரி பேருந்து பயண சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்வதற்காக மாதாந்திர கட்டண பாஸ், வாராந்திர பாஸ், தினசரி பாஸ் வழங்கப்படுகிறது. மாதாந்திர கட்டண பாஸ் ரூ.1000 எனவும், வாராந்திர கட்டண பாஸ் ரூ.300 எனவும், தினசரி கட்டண பாஸ் ரூ.50 எனவும் வசூலிக்கப்பட்டு வந்தது. பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த பாஸ்களுக்கான கட்டணம் இன்னமும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், புதிய கட்டணம் நிர்ணயம் செய்து ஒரு நாள் விருப்பம் போல் பயணம் செய்யும் அட்டை விரைவில் வழங்கப்படும் என்றும் மாநகர் போக்குவரத்து கழக கவுண்டர்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட மாதத்திர சலுகை பயண அட்டை மற்றும் மாதந்திர விருப்பம்போல் பயணம் செய்யும் ரூ.1000 க்குரிய பயண அட்டைகளில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள காலம் வரைக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மூலம் ரூ.50 கட்டணம் கொண்ட தினசரி பஸ் பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. 50 கட்டணம் 70 ரூபாய் என்றும் 300 ரூபாய் பாஸ் 700 ரூபாய், 1000 ரூபாய் பாஸ் 1,400 என்று உயர்த்த முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் உலா வருகின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.