தமிழக அரசு உயர்த்தியிருக்கும் பேருந்து கட்டண உயர்வுக்கு திமுக,விடுதலை சிறுத்தைகள், பாமக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மு.க.ஸ்டாலின்: பேருந்து கட்டண உயர்வால் இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்த பணத்தையும் எடுத்து செலவு செய்து விட்டு போக்குவரத்துக் கழகங்களை நட்டத்தில் மூழ்கடித்து விட்ட அதிமுக அரசு, தன் நிர்வாகச் சீர்கேட்டை மறைக்க இப்படி மக்களின் தலையில் கட்டண உயர்வை ஏற்றி வைத்துள்ளது.

சாமான்ய மக்களின் போக்குவரத்து சேவையில் கை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

தொல். திருமாவளவன்: பேருந்துக் கட்டணம் ஏறத்தாழ இரு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கின்றன. அதற்கு டீசல் விலை உயர்வு காரணமாகக் காட்டப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதிலும் அதற்கேற்ப விலையைக் குறைக்காமல் வரியைப் போட்டு மோடி தலைமையி லான பாஜக அரசும் மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசும் மக்களைக் கொள்ளையடிக்கின்றன.

பேருந்துக் கட்டண உயர்வால் அனைத்துவிதமான விலைகளும் உயரும். அது வறுமையைக் கூட்டும். இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள்தான் இந்தக் கட்டண உயர்வை எந்தக் காரணம் கொண்டும் ஏற்க முடியாது. உடனடியாக இதை முழுமையாகத் திரும்பப் பெறவேண்டும்.

ச.ராமதாஸ்: பேருந்துக் கட்டண உயர்வுகள் மட்டுமின்றி, விபத்து /சுங்கவரி என்ற பெயரில் பயணிகளிடம் ரூ.10 வசூலிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் பகல் கொள்ளைக்காரனை விட மிக மோசமான முறையில் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்க தமிழக அரசு ஆயத்தமாகி உள்ளது. எனவே, தமிழக அரசு அறிவித்த பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் ஊழலை ஒழித்து, வருவாயைப் பெருக்கி போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்கவும், சேவையின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் மீது சுமத்தப்பட்ட பெரும் சுமை

மு.சண்முகம்(தொமுச): போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை சீராக நடத்த வழி தெரியாத இந்த அரசு மக்களிடம் இருந்து கட்டணம் மூலம் வசூல் செய்கின்ற பணத்தை முறையாகப் பயன்படுத்தி போக்குவரத்துக் கழகத்தை நடத்த வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் தான்தோன்றித்தனமாக பல மடங்கு கட்டணங்களை உயர்த்தியிருப்பது வருந்தத்தக்கது.

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் என கண்டித்து உடனடியாக உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப் பெற்று மக்களுடைய கருத்தறிந்து பேருந்து இயக்கங்களை செம்மைப்படுத்தி ஊழலை, முறைகேடுகளை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், கட்டண உயர்வுக்குக் காரணம் தொழிலாளர்கள் போராட்டங்கள் என பொய்யான குற்றம் சாட்டுவதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் பேருந்து கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.