உபேர் நிறுவனம், காவல்துறை ஆய்வாளர் ஆகியோரின் தொந்தரவால் தற்கொலை செய்து கொண்ட கார் ஓட்டுநர் குடும்பத்திற்கு நிவாரணம் கோரிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் செயல்படும் ஓலா, உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் ஒட்டுமொத்த சந்தையையும் கைப்பற்றி வைத்துள்ளன. இதனால் வாடகை கார் ஓட்டுநர்கள் இந்நிறுவனத்தில் இணைந்து வண்டிகளை இயக்க வேண்டி நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். இந்நிறுவனங்கள் ஓட்டுநர்களின் வருவாயில் பெரும்பகுதியை கமிஷனாக எடுத்துக் கொள்கின்றன.

இந்த தொழிலை முறைப்படுத்த வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதில் முன்னணியில் நின்ற உபேர் கார் ஓட்டுநர் முத்துகுமாருக்கு (34) நிர்வாகம் முறையாக சவாரிகளை ஒதுக்கி தராமல் பழிவாங்கி வந்தது. இதனையடுத்து அதிகாரிகளிடம் முறையிட்ட அவர் மீது, நிர்வாகம் மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்தது. அதனடிப்படையில் காவல்துறையினர் முத்துகுமாரின் காரை பறிமுதல் செய்தனர்.

10 நாட்களாகியும் பறிமுதல் செய்த காரை தராதா ஆய்வாளரிடம் நியாயம் கேட்ட முத்துக்குமாரை தரக்குறைவாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்துகுமார் ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்ய முயன்றார். படுகாயமடைந்த அவர் வெள்ளியன்று (ஜன.19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும், வயதான தாய் தந்தையரும் உள்ளனர். 2-வது குழந்தை பிறந்து 15 நாட்கள் தான் ஆகிறது.

இந்நிலையில், உபேர் நிர்வாகம், மீனம்பாக்கம் காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் மீது கொலைக்குற்ற வழக்கு பதிய வேண்டும், முத்துக்குமார் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி சனிக்கிழமையன்று (ஜன.20) ஆலந்தூரில் உள்ள உபேர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றா 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கிண்டி கத்திபாரா பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பா.அன்பழகன், “கால் டாக்சி நிர்வாகங்களின் பழிவாங்கல், முறையற்ற அணுகுமுறை போன்றவற்றால் 2 நாட்களில் 3 ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தொழிலை அரசு முறைப்படுத்தி, ஆட்டோக்களுக்கு உள்ளதுபோல் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்” என்றார்.

Leave A Reply

%d bloggers like this: