கண்ணன் ஜீவா
“வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் இந்தியா சாதிக்குமா ?” இந்தக் கேள்வியானது இந்தியா – தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடருக்குச் சொல்லும் போது எல்லாம் எழுப்பப்படும்.இந்தக் கேள்விக்கு ஒரு முறைக் கூட சாதகமான முடிவு வந்ததே இல்லை. இதோ இந்த முறையும் எதிர்மறையான முடிவுதான். ஆனால் இந்த முறை ஏற்பட்ட முடிவிற்கு இந்திய பந்தவீச்சாளர்கள் காரணமல்ல. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் சேர்த்து, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 30. அப்படியென்றால் இந்த டெஸ்ட் தொடரின் தோல்விக்கு யார் காரணம்? எங்கு சறுக்கியது இந்தியா ?

பயிற்சிப் போட்டிகள் இல்லை;                                                                                                                                                    “பயிற்சியே சிறந்த அணியை உருவாக்கும்’’ என்பார்கள். இந்தக் கருத்து எவ்வளவு சரியானது என்பதை, இந்த டெஸ்ட் தொடர் தோல்வியின் மூலம் இந்திய வீரர்கள் உணர்ந்து இருப்பார்கள். முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் தென் ஆப்பிரிக்கா சென்று இறங்கியது இந்திய அணி. நடைபெறவிருந்த ஒரு பயிற்சி போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் நேரடியாகத் தொடரை தொடங்கியது இந்தியா. அதற்கு கிடைத்த பரிசுதான் தொடர் பறிபோனது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு துணைக் கண்டத்திற்கு வெளியே சென்ற இந்தியா, அந்த நாட்டின் ஆடுகளங்களின் தன்மையை அறிய குறைந்தபட்சம் இரண்டு பயிற்சி போட்டிகளிலாவது விளையாடி இருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால் ஓரளவு பலன் கிடைத்திருக்கும்.

செயல்படாத ஓப்பனிங்
டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரரின் பங்கு என்பது மிகவும் முக்கியம். அவர் பொறுமையாக ஆடி அணிக்குச் சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும். ஆனால், இதை இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் யாரும் செய்யவில்லை. இரண்டு போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.இதை எல்லாம்விட மற்றொரு முக்கியக் காரணம் ரஹானேவை வெளியில் உட்கார வைத்ததுதான். துணைக் கண்டங்களில் அதிக சராசரி வைத்திருக்கும் ரஹானேவிற்கு (54) ஒரு போட்டியில் கூட வாய்ப்புத் தராதது கோலி செய்த மிகப் பெரிய தவறு.

விக்கெட் கீப்பர்
டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனின் பணி மிக முக்கியமானது. 6 ஆவது அல்லது 7 ஆவது இடத்தில் இறங்கும் அவர் அணியைச் சரிவில் இருந்து மீட்க வேண்டும். இதைச் செய்வதில் சஹா மற்றும் பார்த்தீவ் படேல் இருவருமே தோல்வி அடைந்துவிட்டனர்.இவர்கள் இருவரும் இரண்டு போட்டிகளில் சேர்த்து எடுத்த ரன்கள் வெறும் 46 தான். போட்டியின் போது வர்ணனை செய்து கொண்டிருந்த கவாஸ்கர் “டோனி விரும்பி இருந்தால் தொடர்ந்து விளையாடி இருக்கலாம்” என்ற கருத்தை தெரிவித்தார். இதற்கு அர்த்தம் டோனியைத் திரும்ப கொண்டு வர வேண்டும் என்பதல்ல. அவருக்கு மாற்றாக டோனி போன்ற ஒரு அதிரடி வீரரை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான்.

மோசமான பீல்டிங்
கேட்சஸ் வின் மேட்சஸ் என்பார்கள். இந்தச் சூத்திரத்தை இந்திய அணி முறையாகச் செயல்படுத்தவில்லை. இரண்டு போட்டிகளிலும் கோலி தொடங்கி பார்த்தீவ் படேல், முகமது சமி, பாண்டியா என்று அனைவரும் கேட்சுக்கான வாய்ப்புகளைக் கோட்டை விட்டனர். இது போட்டியின் முடிவில் நிர்ணயிப்பதில் மிக முக்கியக் காரணியாக இருந்தது. இதைத் தான் செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்தார் கோலி. அந்தச் சந்திப்பில் “நாங்கள் கூட்டாக செயல்பட்டு வெற்றி பெற கடுமையாக முயற்சி செய்தோம். ஆனால் தென் ஆப்பிரிக்கா எங்களை விடச் சிறப்பாகச் செயல்பட்டது. பேட்டிங், பீல்டிங் இரண்டிலும் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை ” என்றார் விராட்கோலி.இந்தத் தவறுகளால் இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது தென் ஆப்பிரிக்கா . தொடர்ச்சியாக 9 தொடர்களில் வென்ற இந்திய அணிக்கு இது மிக மோசமான தோல்விதான். தொடர் வெற்றிகளுக்கு இடையில் வரும் ஒரு சில தோல்விகள்தான் நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும். நம்மைச் சுயபரிசோதனை செய்து கொள்ளவும் வழிவகுக்கும். அந்த வகையில் இந்தத் தோல்வி இந்திய அணிக்கும் கேப்டன் கோலிக்கும் தேவையான ஒன்றுதான்.

Leave a Reply

You must be logged in to post a comment.