இராசிபுரம், ஜன.19-
குடிநீர் வேண்டி வெண்ணந்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் தாலுகா பகுதிக்கு உட்பட்ட வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்டு தொட்டப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள போயர் தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, ஊராட்சியினர் தண்ணீர் திறந்து விடும்போது, வசதி படைத்த சிலர் தனியாக குழாய் அமைத்து தண்ணீரை முறைகேடாக திருடி வருவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக பொதுகுழாய்களில் தண்ணீர் பிடிக்கும் பொதுமக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும், அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வெள்ளியன்று வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சிபிஎம் கிளை செயலாளர் ஆர்.நடேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். ஒன்றிய செயலாளர் ஜி.செல்வராஜ் வாழ்த்தி பேசினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இப்போராட்டத்தை தொடர்ந்து வெண்ணந்தூர்துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகமணிகண்டன், நாகலிங்கம் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின்னர் தொட்டிப்பட்டி கிராமத்தினை அதிகாரிகள் பார்வையிட்டு தண்ணீர் குழாயில் சரிவர தண்ணீர் வர பாரா மரிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.