கோவை, ஜன.19-
விளைபொருட்களுக்கு கட்டு’படியான விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தியாகிகள் தினமான வெள்ளியன்று விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1982 ஆம் ஆண்டு ஜன.19 ஆம் தேதியன்று நடைபெற்ற நாடு தழுவிய போராட்டத்தின்போது, தஞ்சையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான அஞ்சான், நாகூரான் மற்றும் ஞானசேகரன் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களின் நினைவு தினத்தை தியாகிகள் தினமாக சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அனுசரித்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக வெள்ளியன்று தமிழகம் முழுவதும் இவ்வமைப்பினர் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்போம் என்கிற முழக்கத்தோடு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார். இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை அமலாக்கிட வேண்டும். விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு கட்டுப்படியாகும் லாபகரமான விலையை நிர்ணயித்திட வேண்டும். விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தை நகர்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.இதில் சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், சிஐடியு மாவட்ட செயலாளர் (பொ) எஸ்.கிருஷ்ணமூர்த்தி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, விதொச மாவட்ட தலைவர் வி.சுப்பிரமணி, செயலாளர் வி.திருமலைசாமி ஆகியோர் கோரிக்
கைகளை விளக்கிப் பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் நடைபெற்ற அஞ்சலி உறுதியேற்பு நிகழ்விற்கு சிஐடியு பொதுதொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எம்.கனகராஜ், கட்டுமான சங்க மாவட்டக் குழு உறுப்பினர் பி.துரைசாமி, தண்டபாணி ஆகியோர் தலைமை தாங்கினர். சிபிஎம் ஆனைமலை ஒன்றிய செயலாளர் வி.எஸ்.பரமசிவம் சிறப்புரையாற்றினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல், ஆனைமலையை அடுத்த பொன்னாலம்மன் துறை குடிநீர் வடிகால் வாரிய நீருந்து அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பூர்:
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணை செயலாளர் கே.ஆர். கணேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார்,விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எ.பஞ்சலிங்கம் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்று கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி முழக்கமிட்டனர். உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஜெகதீசன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜ், விவசாய சங்கத்தின் மாநில துணை தலைவர் எஸ்.ஆர்.மதுசூதணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.சுப்பிரமணியம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தாராபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகி கே.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் பி.வசந்தாமணி சிறப்புரையாற்றினார். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.வெங்கட்ராமன், பொது தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் பி.பொன்னுசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழககிளை செயலாளர் டி.ராமசாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ண முர்த்தி மற்றும் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் என்.முத்துசாமி, ஆர்.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு தியாகிகள் தின சிறப்பு கூட்டம் பிஎஸ்என்எல் ஊழியர்சங்க கிளைச் செயலாளர் என்.குமரவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் தியாகிகளின் வரலாறு குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில முன்னாள் செயலாளார் ஏ.நிசார்அகமது பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம் நன்றி கூறினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

சேலம்:
சிஐடியு சேலம் ஜில்லா இரயில்வே ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சேலம் பால் மார்க்கெட் கூட்செட் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் உதவி தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். சுமைப்பணி தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.வெங்கடபதி செங்கொடியை ஏற்றி வைத்தார். இதில் சங்க மாவட்ட செயலாளர் எ.கோவிந்தன், நிர்வாகிகள் சண்முகம், மதியழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

நாமக்கல்
நாமக்கல் குளக்கரை திடலில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு சிஐடியு கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் கு.சிவராஜ், இ.எம்.இராஜேந்திரன், வி.தொ.ச மாவட்ட தலைவர் பி.செங்கோடன் ஆகியோர் தலைமை வகித்தனர். வி.தொ.ச மாவட்ட பொருளாளர் ப.ராமசாமி முன்னிலை விகித்தார். சிஜடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் பி.ஜெயமணி, சு.சுரேஸஷ், வி.தொ.ச சபாபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.