சேலம்,ஜன.19-
சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை கருத்துருக்கள் அனைத்துக் கட்சி கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பொருட்டு 2011 -ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளை மறு வரையறை செய்யப்பட்டதன் மீதான மறுப்புகள், பரிந்துரைகளை 12.01.2018 வரை தெரிவிக்க வார்டு மறுவரையறை ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதன்பேரில் பெறப்பட்ட மறுப்புகள், பரிந்துரைகள் ஆகியவை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வந்த கருத்துருக்கள் மீதான அனைத்துக் கட்சி கலந்தாலோசனைக் கூட்டம் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா.பாஜிபாகரே தலைமையில் நடைபெற்றது. இதில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகள், கருத்துக்கள், பரிந்துரைகள் ஆகியவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பிப்.1 ஆம் தேதியன்று வருகை தர உத்தேசிக்கப்பட்டுள்ள வார்டு மறு வரையறை ஆணையத்திடம் உரிய நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.

முன்னதாக, இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், மாநகராட்சி ஆணையாளர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), அனைத்து அரசியல் கட்சி பிரநிதிகள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: