கோவை, ஜன.19-
கோவையில் ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளியன்று விவசாயிகள் குறைதீர்க்கும்கூட்டம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயத்துறை மற்றும் வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசுகையில், சமீப நாட்களாக வனவிலங்குகள் ஊருக்குள் வருவது அதிகமாகிவிட்டது. இதனால் விவசாயநிலங்கள், பயிர்கள் சேதமடைகின்றன. மேலும், வீடுகள் மற்றும் கடைகளையும் வனவிலங்குகள் சேதப்படுத்துகின்றன. இதுமட்டுமின்றி பல நேரங்களில் மனித உயிர்கள் பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் மக்கள் ஊருக்குள் நடமாடுவதற்கே அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், வனவிலங்குகளால் சேதமடைந்த பயிர்கள், உடமைகள் குறித்து கணக்கீடு செய்வதில் முரண்பாடு உள்ளது. இதன்பின் நிவாரணத்தை தருவதிலும் இழுத்தடிக்கப்படுகிறது என அடுத்தடுத்து விவசாயிகள் குற்றம்சாட்டினர். ஆனால், எப்போதும் போலவே அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததை கண்ட விவசாயிகள் ஒருகட்டத்தில் ஆவேசமடைந்தனர். இதனையடுத்து அனைவரும் ஒன்று திரண்டு காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதியளிக்க வேண்டும் எனக்கூறி திடீரென அதிகாரிகளை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் வனவிலங்கள் ஊருக்குள் வருவதை தடுப்பது குறித்து விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். இதில் மாவட்ட அதிகாரிகள், வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் என முத்தரப்பினரும் பங்கேற்று சுமூக தீர்வை காணலாம் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து மற்ற கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் தொடர்ந்து பேசினர்.

முன்னதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன் மற்றும் காளப்பன் ஆகியோர் அதிகாரிகளிடம் அளித்த மனுவில், சிங்காநல்லூர் ரயில்வே கிராசிங்கில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மேலும், விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை தடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

Leave a Reply

You must be logged in to post a comment.