மேட்டுப்பாளையம், ஜன.19-
மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் தென்னை, வாழை மற்றும் விளை பயிர்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கிராமப் புறங்களில் காட்டு யானைகளின் ஊடுருவலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வியாழனன்று இரவு வெளியேறிய யானை கூட்டமொன்று தேக்கம்பட்டி கிராமத்தினுள் புகுந்து அங்கிருந்த விவசாய பயிர்களை நாசப்படுத்தின. இதனால் ஒரே இரவில் இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களும், முப்பதிற்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் சேதமடைந்தன.

இதேபோல், அப்பகுதியில் இருந்த புடலங்காய் தோட்டங்கள் மற்றும் கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் என அனைத்தும் யானைகளால் சூறையாடப்பட்டுள்ளதாகவும், கடன் வாங்கி விவசாயம் செய்த எங்களுக்கு இதனை சரிக்கட்ட இயலாத அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தேக்கம்பட்டி கிராம விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  மேலும், இனி மேட்டுப்பாளையத்தில் உள்ள நெல்லிதுறை, தேக்கம்பட்டி, தாசம்பாளையம், கிட்டாம்பாளையம், குரும்பனூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் விவசாயமே செய்ய இயலாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, யானைகள் நடமாட்டத்தால் வெளியில் வர முடியாத அசாதாரண சூழல் நிலவுவதாகவும் அச்சத்தோடு கூறுகின்றனர். ஆகவே, வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு அரசு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துக்கின்றனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இது காட்டுயானைகளின் இடப்பெயர்ச்சி காலம் என்பதால் ஊடுருவல் அதிகரித்துள்ளதாகவும், வனத்துறை ஊழியர்கள் பல குழுக்களாக பிரிந்து யானை விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.