திருப்பூர், ஜன.19-
மருத்துவர் சரத்பிரபு மரணத்திற்கு நீதி விசாரணை கோரி ஜன.23 ஆம் தேதியன்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி நிகழ்ச்சி நடத்துவது என திருப்பூரில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் வெள்ளியன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் மருத்துவர் சரத் பிரபுவிற்கு அஞ்சலியும், அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூரிலிருந்து மருத்துவ உயர்கல்விக்குச் சென்று தில்லி யுசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த செல்வமணி என்பவரின் மகன் மருத்துவர் சரத்பிரபு சமீபத்தில் மர்மமான முறையில் இறந்துள்ளார். ஏற்கனவே தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த திருப்பூரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் மருத்துவர் சரவணன் கடந்த 2016 ஜூலை மாதம் மர்மமான முறையில் இறந்தார். இவரின் மரணத்திற்குப் பிறகு மத்திய, மாநில அரசுகள் உரிய விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டணை வழங்கியிருந்தால் தற்போதைய மருத்துவர் சரத்பிரபு மரணத்தைத் தவிர்த்திருக்க முடியும்.

இந்தச் சூழலில் உயர் மருத்துவப் படிப்பிற்கு தலைநகர் தில்லி செல்ல கடும் அச்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உரிய பாதுகாப்பையும், உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு தில்லி தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை அமைத்திட வேண்டும். இந்த மர்ம மரணங்கள் குறித்து தாமதமின்றி நீதி விசாரணை நடத்தி உண்மைகளை மக்கள் மத்தியில் தெரிவித்திட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தும், மறைந்த மருத்துவர் சரத்பிரபுவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் அனைத்து அரசியல் இயக்கங்கள், தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பொது நல அமைப்புகள், வர்த்தக அமைப்புகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் திருப்பூர் பொதுமக்களின் சார்பாக எதிர்வரும் ஜன.23 ஆம் தேதியன்று (செவ்வாய்கிழமை) மாலை 5 மணி முதல் 7 மணி வரை திருப்பூர் மாநகராட்சி அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி நிகழ்ச்சி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் அனைத்துத் தரப்பினரும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை வேலைகளை நிறுத்திவிட்டு, கடைகளை அடைத்து பங்கேற்க வேண்டுமாய் அனைத்துக் கட்சிகள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் மாநகர அவைத் தலைவர் க.ஈஸ்வரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண்ணிகிருஷ்ணன், டி.ஜெயபால், வடக்கு மாநகரச் செயலாளர் பி. முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.பழனிச்சாமி, எஸ்.ரவிச்சந்திரன், ச.செல்வராஜ், ஆர்.செந்தில்குமார், காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், கதர் தங்கராசு, தமாகா மாவட்டத் தலைவர் எஸ். ரவிக்குமார், வி. தனசேகரன், ஆசிரியர் பாலு, மதிமுக சார்பில் மாநகரச் செயலாளர் சு. சிவபாலன், எம். மனோகரன், மு. சம்பத், ஈ.சிவகுமார், விசிக சார்பில் வடக்கு மாவட்டச் செயலாளர் அ. தமிழ்வேந்தன், மாவட்டத் துணைச் செயலாளர் ப. சத்யன், ஆர். வெற்றிவளவன், திராவிடர் கழகம் சார்பில் இரா. ஆறுமுகம், மாநகரச் செயலாளர் பா.மா. கருணாகரன், திவிக சார்பில் சு.துரைசாமி, முகில் ராசு, தபெதிக சார்பில் சண். முத்துக்குமார், இரா. இரமேசு பாபு உள்ளிட்ட அனைத்து கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: