நெல்லை,
ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நயினார் நாகேந்திரன், மத உணர்வைத் தூண்டி வன்முறைக்கு வித்திட்டதாக நெல்லை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆண்டாள்குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து பாளையங்கோட்டையில் ஸ்ரீஆண்டாள் பக்த சபை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய நயினார் நாககேந்திரன், ‘இந்து தெய்வங்களை இழிவாகப் பேசினால் அவர்களைக் கொலை செய்யக் கூட தயாராக இருக்க வேண்டும். இதைச் சாதாரணமாகப் பேசி விட்டுப் போய்விடக் கூடாது’ என்றவர், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களைப் பார்த்து, ‘வைரமுத்துவைக் கொலை செய்ய வேண்டுமா? கூடாதா?’ எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில், `ஆண்டாளை தவறாகப் பேசிய வைரமுத்துவின் நாக்கை அறுத்து வாருங்கள், நயினார் நாகேந்திரன் 10 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னால் காவல்துறை என் மீது வழக்குப் போடும், ஆனால் இதுவரை வைரமுத்துமீது மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்? இதுபோன்று இந்து மதத்தை இழிவாகப் பேசக் கூடிய வைரமுத்து உள்ளிட்டவர்களை நாட்டை விட்டே விரட்ட வேண்டும்’ எனப் பேசினார்.
சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியதைக் கண்டித்து அரசியல் கட்சியினரும் சமூக அமைப்பினரும் கருத்துத் தெரிவித்தனர். இந்த நிலையில், அவரது பேச்சு மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு இரு சமூகத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நயினார் நகேந்திரன் மீது வழக்கு பதிவு
இதுதொடர்பாக, நயினார் நாகேந்திரனுடன் நெல்லை மாவட்ட பா.ஜ செயலாளரான தயா சங்கர், மாவட்ட துணைச் செயலாளர் டி.வி.சுரேஷ், இந்து முன்னணி வி.பி.ஜெயக்குமார், அய்யா வழி அமைப்பின் சிவச்சந்திரன், சென்னை கிருஷ்ணபிரியா, பாலகன், ஆய்குடி குமார், உள்ளிட்ட 8 பேர் மீது இரு சமூகங்களுக்கு இடையே மத மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.