-பெ.சண்முகம்
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
காவிரிப் பாசன பகுதியில் விவசாயம் என்பது “நித்தியகண்டம் பூரண ஆயுசு” என்ற நிச்சயமற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளது. 2016-ஆம் ஆண்டு கடும் வறட்சியாலும் கர்நாடகம் தண்ணீர் கொடுக்காததாலும் வேளாண்மை முற்றிலும் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்தார்கள். பல்லாண்டு காலமாக குறுவை சாகுபடி என்பதே இல்லாமல் போய்விட்டது. 2017ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தான் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. எனவே, சாகுபடி பணிகளை தாமதமாகத்தான் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். டெல்டாவில் பல பகுதிகளுக்கு தண்ணீர் போய்ச் சேராததால் பல லட்சம் ஏக்கர்கள் தரிசாக போடப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் நட்ட பயிர்கள் கருகி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக 16 லட்சம் ஏக்கரில் சம்பாசாகுபடி நடைபெறும். ஆனால் இப்போது சுமார் 12 லட்சம் ஏக்கரில் தான் பயிர் செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 60 சதவீத பரப்பளவில் இப்போது தான் பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளது. இந்த நிலையில் தண்ணீர் பாய்ச்சாமல் போனால் மொத்தமும் பதராக – கருக்காயாகப் போய்விடும் ஆபத்து உள்ளது. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இருபதாயிரம் ரூபாய் விவசாயிகள் செலவு செய்துள்ளனர். மகசூல் முழுமையாக வந்து சேரவில்லையென்றால் மீண்டும் கடன் வலையிலிருந்து மீள முடியாமல் அதிர்ச்சி மரணங்கள், தற்கொலைகள் போன்ற துயரச் சம்பவங்கள் நடப்பதை தடுக்க முடியாது.
எனவே, விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க இருக்கிற ஒரே வழி கர்நாடக மாநிலத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத்தருவது தான்.

நட்டபயிர்களை காப்பாற்ற தண்ணீர் விடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. காவிரி தொடர்பான வழக்குகளில் விசாரணைகள் முடிக்கப்பட்டு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டிருக்கிற நிலையில் புதிய மனுக்களை ஏற்க முடியாது என்று காரணம் கூறி மனுக்களை தள்ளுபடி செய்தனர். டெல்டா விவசாயம், “அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிற நோயாளியின் நிலையில் இருக்கிற போது, உடனடி சிகிச்சை அளித்து காப்பாற்றுவதற்குப் பதிலாக நாங்கள் நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்று மருத்துவர்கள் சொன்னால் அதற்குள் நோயாளியின் உயிர் பிரிந்து விடும். அப்படித்தான் உச்சநீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்ததும்.

5.2.2007இல் நடுவர்மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில், மாதவாரியாக தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் தரவேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ இந்த பதினோரு ஆண்டுகளில் தீர்ப்பை மதித்து எப்போதுமே கர்நாடக மாநில அரசு நடந்து கொண்டதில்லை. மத்திய அரசும் குறிப்பிடத்தக்க எந்த தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை. உச்சநீதிமன்றம் தண்ணீர் திறந்துவிடக்கோரி பலமுறை உத்தரவிட்டும் அதை ஏற்று தண்ணீர் திறந்துவிடாமல் கர்நாடக மாநில அரசு மனுக்கள் மேல், மனுக்களாக போட்டுக் கொண்டிருந்ததை நாடறியும். இத்தகைய நிலையில், உடனடியாக தண்ணீர் வேண்டுமென்ற தமிழக அரசின் மனுவை உரிய கவனத்துடன் உச்சநீதிமன்றம் பரிசீலிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

சமீபத்தில் தமிழக முதலமைச்சர் கருகும் பயிரைக் காப்பாற்ற 15 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகிறது. உடனடியாக 7 டி.எம்.சி தண்ணீராவது கொடுங்கள் என்று கர்நாடக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். ஆனால் அந்த கடிதத்துக்கு எடுத்த எடுப்பிலேயே ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார். இதையடுத்து தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் வந்து சேர்ந்ததா என்று கூட பிரதமர் அலுவலகம் தெரிவிக்கவில்லை. இத்தகைய நிலையில் டெல்டா மாவட்ட விவசாயிகள் தூக்கத்தை தொலைத்து விட்டு துக்கத்தை சுமந்து கொண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்.

நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகா 80 டி.எம்.சி தண்ணீர் பாக்கி தர வேண்டியுள்ளது. ஆனால் தமிழக அரசு 15 டி.எம்.சி தேவையென்று கூறி 7 டி.எம்.சியாவது கொடுங்கள் என்று தான் கேட்டது. பஞ்ச பாண்டவர்கள் துரியோதனர்களிடம் 5 கிராமங்களையாவது கொடுங்கள் என்று கேட்டு கடைசியாக 5 வீடாவது கொடுங்கள் என்ற போதும் அதையும் தர மறுத்து அவர்களை நாட்டைவிட்டே துரத்த முற்பட்ட கதைதான் நினைவுக்கு வருகிறது.

இத்தனைக்கும் கர்நாடக அணைகளில் அந்த மாநில அரசு அன்றாடம் வெளியிடும் அணைகளின் நீர்மட்டம் தொடர்பான விபரங்களே தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கும் அணைகளில் 17ஆம் தேதி கணக்குபடி 41 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளதை காட்டுகிறது. ஆனால் இதை விட கூடுதலாக ஏறத்தாழ 70 டி.எம்.சி தண்ணீர் இருக்கும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர். எப்போதுமே உண்மையான நீரின் அளவை அவர்கள் வெளியிடுவதில்லை என்று கூறுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இந்த பருவ சாகுபடி பணிகள் நிறைவடைந்துவிட்டன. இப்போதைக்கு அவர்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் தேவையில்லை. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கூடாது என்ற நோக்கத்துடனேயே இந்த பிரச்சனை அணுகப்படுகிறது. இது கர்நாடக மாநில அரசின் அடாவடித்தனமான போக்கையே வெளிப்படுத்துகிறது.

இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்குரிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும். எனவே, தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்திய பிரதமரை நேரடியாக சந்தித்து காவிரி டெல்டா பகுதியின் நெருக்கடியான நிலைமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். கடிதம் எழுதுவது மட்டும் போதாது என்பதே விவசாயிகளின் கருத்தாக உள்ளது. தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தங்களின் பதவியை தக்க வைத்துக் கொள்ள பலமுறை பிரதமரை சந்தித்துள்ளனர். இப்போதும் மத்திய அரசுடன் இணைக்கமாகவும், நெருக்கமாகவும் இருப்பதற்கு காரணம், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்காகத்தான் என்று விளக்கமளிக்கின்றனர். அதுதான் உண்மையென்றால், அந்த நெருக்கத்தை பயன்படுத்தி காவிரி டெல்டாவில் கருகும் பயிரைக் காப்பாற்ற தண்ணீர் பெற்றுவர வேண்டாமா? ஆகவே, தமிழக முதல்வர், தண்ணீருக்காக இந்திய பிரதமரை சந்தித்து அழுத்தம் தர வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.

மத்திய பி.ஜே.பி அரசும், கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல், ஆட்சியைக் கைப்பற்றுவது போன்ற தங்கள் நோக்கத்திற்காக தமிழக விவசாயிகளை வஞ்சித்துவிடக் கூடாது. பல லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உணவு உற்பத்தியோடு சம்பந்தப்பட்ட விஷயம் என்ற முறையிலும், தமிழக மக்களும் இந்தியாவின் ஒரு பகுதியினர் தான் என்பதை உணர்ந்து மத்திய அரசு இந்த பிரச்சனையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘தமிழகத்தின் நெற்களஞ்சியம்’ என்ற பெருமை பொய்யாய், பழங்கதையாய் ஆகிவிடுமோ என்ற அச்சம் மேலிடுகிறது. பெட்ரோலிய மண்டலம் என்று அறிவித்து விளைநிலங்களை பாலைநிலமாக மாற்றும் நடவடிக்கையில் மத்திய – மாநில அரசுகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மனிதர்கள் உயிர் வாழ உணவும், நீரும் அத்தியாவசியமானது. அதை அழிக்க நினைப்பவர்கள் மனித குல விரோதிகள் என்ற முறையில் கடும் எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டியது நமது கடமை.

எனவே, மத்திய அரசை நிர்ப்பந்திக்கக் கூடிய வகையில், அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் ஜனவரி 27ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டிருக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த மறியல் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் பாராமுகத்தை கண்டித்தும், உடனடியாக தலையிட்டு தண்ணீர் பெற்றுத்தர வலியுறுத்தியும் நடைபெற இருக்கும் இந்த ரயில் மறியல் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்று வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் காவிரி நீர் பிரச்சனைக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் தங்களின் பேராதரவை நல்க வேண்டுகிறோம். ஒன்றுப்பட்ட போராட்டம் ஒன்றே நமது துயரோட்டும் என்ற முழக்கத்தை முன்னெடுப்போம்.

Leave a Reply

You must be logged in to post a comment.