திருப்பூர், ஜன.19-
திருப்பூர் அருகே பஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.

திருப்பூர், மங்கலம் காவல் எல்லைக்கு உள்பட்ட வேலாயுதம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பஞ்சாலை செயல்பட்டு வருகிறது. வியாழக்கிழமை மாலை ஆலையில் 30-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆலையின் ஒரு பகுதியில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. ஆலையில் வைக்கப்பட்டிருந்த பஞ்சில் பற்றிய தீ வேகமாகப் பரவியதை அடுத்து அங்கிருந்த தொழிலாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் வரை போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு தீயில் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. எனினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.