மேட்டுப்பாளையம், ஜன.18-
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாமிற்கு வியாழனன்று வருகை புரிந்த ரஷ்ய நாட்டு கலாச்சாரக் குழுவினர், தங்கள் நாட்டில் இல்லாத விலங்கான யானைகளை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.

இந்திய – ரஷ்ய கலாச்சார பரிவர்த்தனை குழு சார்பில் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் நாட்டுப்புற நடன கலையினை கற்கவும், தங்களது ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற நடனக்கலையினை இங்குள்ள நடன கலைஞர்களுக்கு கற்றுத்தரும் வகையிலும் ரஷ்யாவில் இருந்து 13 பெண்கள் கொண்ட நடனக்குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். பல்வேறு கலாசார நிகழ்சிகளில் பங்கேற்ற இக்குழுவினர் வியாழனன்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் யானைகள் நலவாழ்வு முகாமை பார்வையிட விரும்பி வந்திருந்தனர்.

ரஷ்ய நாட்டை பொறுத்தவரை நிலத்தில் வாழும் பேருயிரான யானைகள் வாழ்வதில்லை என்பதால், இவற்றை நேரில் காண ஆர்வமுடன் சிறப்பு அனுமதி பெற்று வந்திருந்த இக்குழுவினரை முகாம் அதிகாரிகள் வரவேற்று யானைகளை காண அழைத்து சென்றனர். அங்கு யானைகளின் தனி சிறப்புகள் மற்றும் இங்கு யானைகளை தினசரி பராமரிக்கும் முறை, அவற்றின் இயல்புகள் குறித்து ரஷ்ய குழுவினருக்கு விளக்கி கூறினார். இதன்பின் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக நாட்டுப்புற கலைகள் எங்களை வியக்க வைத்ததை போன்றே, இங்குள்ள யானைகளும் எங்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எங்களது, இந்த தமிழக பயணத்தை வாழ்வில் மறக்கவே இயலாது என்று தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: