திருப்பூர், ஜன. 18-
திருப்பூர் குமார்நகர் போக்குவரத்து அலுவலகம் அருகே சிக்னலை மதிக்காமல் வந்த காவல் துறையின் வாகனம் மோதியதை தட்டிக்கேட்ட தம்பதியினரை தாக்கிய காவலரைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த முனிராஜ். இவர் வியாழக்கிழமை தனது சொந்த வேலை காரணமாக தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் அவிநாசி சாலையில் உள்ள குமார்நகர் வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வந்த காவல்துறை வாகனம் ஒன்று சிக்னலை மதிக்காமல் வந்ததோடு முனிராஜின் இருசக்கர வாகணத்தின் மீதும் மோதியுள்ளது. இதனால் முனிராஜ் காவல் வாகனத்தை ஓட்டிவந்த மாவட்ட ஆயுதப்படை காவலர் அன்பழகனிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். தன்னை எப்படி கேள்வி கேட்கலாம் என்று ஆத்திரத்தில் அன்பழகன், “என்னையா கேள்வி கேட்கிறாய்?” என்று முனிராஜை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சமரசம் செய்து வைக்க முற்பட்டனர். அப்பொழுது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அன்பழகனை பாதுகாக்கும் விதத்தில், அவரை உடனடியாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பொதுமக்களை தாக்கிய காவலர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் பாதிக்கப்பட்ட முனிராஜூடன் பொதுமக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் முனிராஜை சமரசம் செய்து வைத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: