பொள்ளாச்சி, ஜன.18-
சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்தி வரும் தென்னை நார் கழிவு ஆலையை அகற்றக்கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பேரூராட்சி 21 ஆவது வார்டுக்குட்பட்ட ஜெயபிரகாஷ் வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இங்கு இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான நிலத்தில் உரிய அனுமதியின்றி சில தனிநபர்கள் தென்னை நார் கழிவுகளை கொட்டி ஆலை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் கொட்டப்படும் தென்னை நார்கழிவுகள் காற்றில் கலந்து அப்பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த தென்னை கழிவு ஆலையை அகற்றக்கோரியும், அதனை நடத்துபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் வியாழனன்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இம்மனுவினை சங்கத்தின் ஆனைமலை ஒன்றிய செயலாளர் கே.ஏ.பட்டீஸ்வர மூர்த்தி தலைமையில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஏ.துரைசாமி மற்றும் விவசாயதொழிலாளர் அளித்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்டசார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: