கோவை, ஜன.18-
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தாய்சேய் நல வாகனம் இயக்குவதில் காட்டப்படும் பாரபட்சம் காரணமாக தனியார் வாகனங்கள் வசூல்வேட்டை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டரா பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். சமீபகாலமாக இங்கு பிரசவத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பிரசவத்திற்கு பிறகு தாய் மற்றும் குழந்தையை இலவசமாக வீட்டில் சென்று விடுவதற்காக கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தாய்சேய் நல வாகனம் (102) பொள்ளாச்சி அரசுமருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த வாகனம் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும், பிரசவத்திற்கு பின்னர் பெரும்பாலானோர் தனியார் வாகனம் அல்லது டிரஸ்ட் வாகனங்கள் மூலமாகவே வீட்டிற்கு செல்ல நிர்பந்திக்கப்படுகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 180 குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் ஐம்பதுக்கும் குறைவானவர்கள்கூட அரசு தாய் சேய் நல வாகனத்தில் செல்லவில்லை. தாய் சேய் நல வாகனம் இலவசமாக இயக்கப்படுவதால், தனியார் வாகனங்களுக்கு வருவாய் பாதிக்கிறது என்பதால் திட்டமிட்டு வாகனம் பழுது போன்ற காரணங்கள் சொல்லப்படுகிறது. மருத்துவமனையில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், வேண்டுமென்றே தாய்சேய் நல வாகனம் இயக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.இவ்வாறு தாய்சேய் நல வாகனம் முறையாக இயக்கப்படாததால் ஏழை, எளிய மக்கள் தனியார் மற்றும் டிரஸ்ட் வாகனங்களில் அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையே காரணமாக வைத்து தனியார் வாகனங்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது எடுக்கப்படவில்லை. அதேநேரம், புகார் அளிப்பவர்கள் தனியார் வாகன உரிமையாளர்களால் மிரட்டப்படுகிற சம்பவமும் நடைபெறுகிறது. ஆகவே, கோவை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தாய்சேய் நல வாகனம் பாரபட்சமின்றி இயங்கவும் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

Leave A Reply

%d bloggers like this: