சேலம், ஜன.18-
மார்க்சிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளரை தாக்கி, கொடூரமாக நடந்து கொண்ட காவல்துறையை கண்டித்து சேலம் மற்றும் நாமக்கல்லில் ஆவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் காய்கறி வியாபாரிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவல் உதவியாளரை தட்டி கேட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கந்தசாமியை சம்பவ இடத்திலேயே காவல்துறையினர் கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்பின்னரும் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று மிக அராஜகமான நடத்து கொண்டதுடன், கொலை வெறி தாக்குதலையும் நடத்தியுள்ளனர். காவல் துறையின் இந்த வெறியாட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கே.வெங்கடாச்சலம் தலைமை வகித்தார். இதில் மாநிலக் குழு உறுப்பினர்பி.தங்கவேலு, மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மேற்கு செயலாளர் எம்.கனகராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மேலும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குழந்தைவேல், எம்.சேதுமாதவன், டி.உதயகுமார், எ.முருகேசன், எஸ்.கே.சேகர், ஜி.கணபதி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிப்பாளையம் பேருந்து நிலையத்தில் வியாழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.சுரேஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தங்கமணி, மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கோமதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில், கிளை செயலாளர் பி.ஜெயந்தி நன்றி தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: