புதுதில்லி;
தலைமை நீதிபதி மற்றும் 4 மூத்த நீதிபதிகள் இடையிலான பிரச்சனையில் இழுபறி நிலைமை தொடர்கிறது.நீதிபதிகள் இடையேயான மோதல் முடிவுக்கு வந்து விட்டது என்பதற்கு அடையாளமாக பொது விருந்து ஒன்றுக்கு புதன்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன், அதிருப்தி நீதிபதிகளில் மூவர் மட்டுமே கலந்து கொண்டனர்.
நீதிபதி செலமேஸ்வரர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை. நீதிமன்றத்திற்கும் வரவில்லை. அவர் உடல் குறைவால் விடுப்பில் சென்று விட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஜே. செலமேஸ்வர், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர், கடந்த வெள்ளிக்கிழமை பகிரங்கமாக குற்றம்சாட்டினர். குறிப்பாக, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறார்; தன்னிச்சையாக நடந்து கொள்கிறார் என்று மூத்த நீதிபதிகள் கூறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிபதிகளுக்கு இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர பார் கவுன்சில் களத்தில் இறங்கியது. நீதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி- ஒருகட்டத்தில் பிரச்சனை தீர்ந்து விட்டதாகவும் கூறியது.

ஆனால், மாற்றியமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வில் அதிருப்தி நீதிபதிகள் நால்வருக்கும் இடம் அளிக்கப்படாதது, பிரச்சனை நீடிப்பதை வெளிக்காட்டியது. அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், பிரச்சனை நீடிப்பதை ஒப்புக் கொண்டார். ஓரிரு நாளில் தீர்வுகாணப்படும் என்று நம்பிக்கையும் தெரிவித்தார்.அதற்கேற்ப, நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மூத்த நீதிபதிகள் நால்வரையும் தனது அறைக்கு அழைத்து சுமார் 15 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்றும் இந்த பேச்சு தொடரும் என்று கூறப்பட்டது. அத்துடன் பொது விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி மதிய உணவு இடைவேளையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை மீண்டும் சந்தித்து பேச்சு நடத்திய நீதிபதி ரஞ்சன் கோகாய், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர், விருந்திலும் கலந்து கொண்டனர்.

ஆனால், நீதிபதி செலமேஸ்வர் உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பில் சென்றார். அவர் நீதிமன்றத்திற்கும் வரவில்லை; விருந்திலும் கலந்துகொள்ளவில்லை. செலமேஸ்வர் விருந்தில் கலந்துகொள்ளாதது, நீதிபதிகளுக்கு இடையிலான பிரச்சனை தீரவில்லை என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது.முன்னதாக நேற்று மாலை, நீதிபதி செலமேஸ்வர் வீட்டில் நீதிபதிகள் குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகுர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, நீதிபதி யு.யு. லலித், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரும் செலமேஸ்வரை மாலையில் சந்தித்துப் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.