ஏற்காடு, ஜன.17-
அரசு தாவரவியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி வழங்குவதில் பராபட்சம் காட்டப்படுவதாக கூறி தோட்டக்கலை அலுவலரை ஊழியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தேட்டக்கலைத்துறையின் கீழ் ரோஜா தோட்டம், ஐந்தினை பூங்கா, தாவரவியல் பூங்கா, அண்ணா பூங்கா, ஏரி பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காக்களில் நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்களாக சுமார் 150க்கும் மேற்பட்டேர் பணி புரிந்து வருகின்றனர். இதில் அரசு தாவரவியல் பூங்காவில் 40க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டு வந்தது. இச்சூழலில் கடந்த இரு வாரங்களாக குறிப்பிட்ட 12 நபர்களுக்கு மட்டும் வாரத்திற்கு 4 நாட்கள் பணி வழங்கப்படுவதாகவும், மற்ற ஊழியர்களுக்கு அவ்வாறு பணி வழங்காமல் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த ஊழியர்கள் புதனன்று காலை தோட்டக்கலை அலுவலர் குமாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 4 நாட்காளவது பணி வழங்க வேண்டும் என முறையிட்டனர். ஆனால், அதற்கு போதிய நிதி தற்போது இல்லை என்றும், நிதி அதிகரிக்கும்போது வாரத்திற்கு 6 நாட்கள் வரை பணி வழங்கப்படும். மேலும், இனிமேல் பணி வழங்குவதில் ஊழியர்களிடம் பாரபட்சம் காட்டப்படாது என்றும் தோட்டக்கலை அலுவலர் குமார் உறுதியளித்தார். இதையடுத்து ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: