திருப்பூர், ஜன.17 –
ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்தக் கூலியைக் குறைத்த்தது, செல்லா பண விவகாரம், உதிரி பாகங்கள் விலையேற்றம் உள்ளிட்டகாரணங்களால் விசைத்தறி உரிமையாளர்கள் நெருக்கடியில் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, வங்கிக்
கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ரா.வேலுச்சாமி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் புதனன்று திருப்பூர் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்து வருகிறோம். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை விலைவாசிக்கு ஏற்ப ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகியோர் ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தி, கூலி உயர்வு அறிவிக்க பெற்று ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கி வருகிறார்கள். 2014-ம் ஆண்டு விலைவாசிக்கு ஏற்ப ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் தொழிலாளர் நலத்துறை மற்றும் ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் 27 மற்றும் 31 சதவிகித கூலி உயர்வு அறிவிக்கப்பட்டது. அதையடுத்து கூலி உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, மின் கட்டணம், ஒர்க்சாப் கட்டண உயர்வு என்று உயர்த்தப்பட்ட கூலியை விட பலமடங்கு செலவு உயர்ந்துவிட்டது.

இந்த நிலையில் 2014-ம் ஆண்டு கூலியை அடிப்படையாக கொண்டு திட்டமிட்டு, வங்கியில் கடன்பெற்று பலரும் தொழில் தொடங்கினர். ஆனால் உயர்த்திய கூலியை வெறும் 6 மாதங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மீண்டும் குறைத்துவிட்டனர். இதனை சரிசெய்து ஒப்பந்தக் கூலியை அமல்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால் விசைத்தறி தொழிலுக்கு வங்கிக்கடன் பெற்று விசைத்தறி தொழில் தொடங்கிய விசைத்தறியாளர்கள், வங்கிக்கு மாத தவணைத் தொகை செலுத்த முடியவில்லை. மேலும், 2017-ம் ஆண்டு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மீண்டும் ஒரு கூலி உயர்வு ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஆனால் 2104-ம் ஆண்டு ஒப்பந்தமே அமல்படுத்தப்படததால் 2011-ம் ஆண்டு கூலியை பெற்றுக்கொண்டு மிகுந்த சிரமத்தில் உள்ளோம். மேலும் மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் தொழில் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இன்றைக்கு பலரும் தறிகளை விற்று கடன்களை அடைத்துள்ளனர். இதனால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதுடன், பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆகவே, விசைத்தறியாளர்களை காக்க அனைத்து விதமான வங்கிகளிலும் விசைத்தறியாளர்கள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய ஆவணம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: