நாமக்கல், ஜன.17-
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டிரெட்டிபட்டியில் சனியன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் புதனன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

அரசு விதித்துள்ள அடிப்படை விதிகள் மற்றும் சட்ட,திட்ட விதிகளுக்குட்பட்டு ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படுகின்றது. எனவே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு விதித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் சட்ட திட்டங்களையும் முழுமையாக பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டுமென ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.