தாராபுரம், ஜன.17-
காய்ந்து கிடக்கும் நெற்பயிரை காப்பாற்ற வீராட்சிமங்கலம் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும் எனக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

தாராபுரம் கொளிஞ்சிவாடி வாய்க்காலில் பழைய அமராவதி பாசனத்தில் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் வீராட்சிமங்கலம் கிளை வாய்க்கால் முலம் 75 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. வீராட்சிமங்கலம் பழைய அமராவதி பாசனத்தின் கடைமடை பகுதி என்பதால் 5 நனைப்பு தண்ணீர் விட்டும் கடைமடை பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் சென்று சேரவில்லை. இதனால் நெற்பயிர்கள் கருகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீராட்சிமங்கலத்தை சேர்ந்த விவசாயி குப்புராஜ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் புதனன்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், தளவாய்பட்டினம் தடுப்பணையில் இருந்துதேங்கி இருக்கும் தண்ணீரை வீராட்சிமங்கலம் வாய்க்காலுக்கு திறந்துவிட வேண்டும் என அங்கு பொறுப்பில் இருந்த உதவி பொறியாளர் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உயரதிகாரிகளிடம் கலந்து பேசிய உதவி பொறியாளர் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.