கோவை, ஜன.17-
மார்க்சிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் அராஜக போக்கை கண்டித்து புதனன்று ஆவேச ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சிவகங்கை வில்லியரேந்தல் கிராமத்தில் உள்ள சந்தை வியாபாரிகளை காவல்துறையினர் கடுமையாக தாக்கி காய்கறி உள்ளிட்ட பொருட்களை சாலையில் வீசி நாசப்படுத்தினர். இச்சம்பவத்தை நேரில் கண்ட சிபிஎம் சிவகங்கை மாவட்ட செயலாளர் மு.கந்தசாமி, காவல்துறையினரின் இந்த அராஜக போக்கை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் கந்தசாமி மீது நிகழ்விடத்திலேயே கொடடூரமான கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்பின்னர் அவரை காவல்நிலையம் கொண்டு சென்று அங்கும் கொடூரமாக தாக்கியுள்ளனர். காவல்துறையினர் இந்த அராஜக செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக புதனன்று கோவை சிவானந்தா காலனி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், எஸ்.கருப்பையா, எஸ்.ஆறுமுகம், வி.பெருமாள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.ஜெயபாலன், கே.அஜய்குமார், கே.பாலமூர்த்தி மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று காவல்துறையை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

திருப்பூர்:
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளர் பி.முருகேசன் தலைமை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் காவல் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து உரையாற்றினர். இதில் பெண்கள் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டு காவல் துறையின் அத்துமீறலைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.