கோவை, ஜன.17-
கோவை அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான கேத் லேப்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிறுநீரக மாற்று, இதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள கேத்லேப்கள் அவசியம். இந்நிலையில் தமிழகத்தில் கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட ஐந்து அரசு மருத்துவமனைகளில் கேத் லேப்கள் அமைக்க ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. இருப்பினும் ஆய்வகங்கள் அமைக்க காலதாமதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கேத் லேப்கள் அமைக்கும் பணிகள் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் துவங்கியது. தற்போது நவீன கருவிகள் பொருத்தப்பட்டு கேத் லேப் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், இன்னும் ஒரு சில வாரங்களில் கேத் லேப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் அசோகன் கூறியதாவது: கேத் லேப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட்டால், இருதய அறுவை சிகிச்சைகள் எளிதில் மேற்கொள்ளலாம். குறிப்பாக, ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்ட், ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, ரத்தக்குழாய் அடைப்புக்கான ஸ்டென்ட் பொருத்துதல் உள்ளிட்ட அனைத்து அறுவை சிகிச்சையும் மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply