கோவை, ஜன.17-
காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஒரு நாள் பணி புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதனன்று ஈடுபட்டனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின்படி அனைத்து அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களையும் அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும். இத்திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்க திட்டமிட்டு மத்திய அரசு நிதிகளை குறைப்பதை கைவிட வேண்டும். மேலும், அங்கன்வாடியில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்ப அரசு தாமதிக்கிறது. குறிப்பாக, கோவையில் பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்தும், தற்போதுவரை அவற்றை நிரப்பாமல் மாவட்ட நிர்வாகம் தாமதித்து வருகிறது. ஆகவே, இப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி புதனன்று கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஸ்டெல்லா முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் (பொ) எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். நிறைவாக, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அலமேலு மங்கை நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.