புதுதில்லி, ஜன. 16-

மத்திய அரசு முன்மொழிந்துள்ள 2017ஆம் ஆண்டு தேசிய மருத்துவ  ஆணைய சட்டமுன்வடிவானது, ஏழைகளுக்கு விரோதமானது, மக்களுக்கு விரோதமானது  என்றும் இது குறித்து மத்திய சுகாதார அமைச்சருடன் வெளிப்படையாக வாதிடத் தயார் என்றும் ‘எய்ம்ஸ்’ ரெசிடெண்ட் டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டமுன்வடிவானது, ஏழைகளுக்கு விரோதமானது, மக்களுக்கு விரோதமானது மட்டுமல்ல, மருத்துவக் கல்வியையே பணக்காரர்கள் மற்றும் ஆதிக்கக்காரர்களின் கைகளில் ஒப்படைக்கும் ஒன்றுமாகும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். “இச்சட்டமுன்வடிவு  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டால், நாட்டின் மருத்துவக் கல்வியின் எதிர்காலமே  சீர்குலைந்துவிடும்,” என்றும் அவர்கள் மேலும் கூறினார்கள்.

”எனவே, இந்தச் சட்டமுன்வடிவின் மோசமான அம்சங்கள் குறித்து  வாதிட நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் ஹர்ஜித் சிங் பட்டி அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

”நாங்கள் மனிதகுலத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற முறையிலும், எங்களிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் பக்கம் நிற்க வேண்டும் என்ற முறையிலும், எங்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களைக் காட்டிலும் நோயாளிகளின் நலன்களைப் பாதுகாப்பது முக்கியம் என்ற முறையிலும்தான் பயிற்றுவிக்கப்பட்டோம். ஆனால் இந்தச் சட்டமுன்வடிவானது, இதற்கு முற்றிலும் விரோதமானது. இத்தகைய மருத்துவக் கல்வியின் அடிப்படையையே தகர்க்கக்கூடியது. மருத்துவக் கல்வி மற்றும் துறையை மருத்துவத்துடன் சம்பந்தமே இல்லாத அதிகார வர்க்கத்தினர், அரசியல்வாதிகள் மற்றும் மருத்துவக் கல்வியில் மாணவர்சேர்க்கையில்  60 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை கார்ப்பரேட்டுகள் விதிக்கும் கட்டணம் தீர்மானித்திடும் வகையில் மருத்துவக் கல்வி,  கார்ப்பரேட்டுகளின் முழு கட்டுப்பாட்டிற்குள் வைத்திட வகை செய்கிறது, ” என்றும் அவர் தன் கடிதத்தில் எழுதியுள்ளார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.