புதுதில்லி, ஜன. 15-

பாஜக/ஆர்எஸ்எஸ் நடத்திடும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எப்படி பங்கேற்க முடியும் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது,

இது தொடர்பாக கட்சியின்  அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: “மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்று நடந்ததாகவும், அதில் வரவிருக்கும் திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் சில செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. இக்கூட்டத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான, அஜித் டோவலும் கலந்துகொண்டார் என்றும் சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது உண்மையாயின், இது அரசின் விதிமுறைகளை அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் மீறிய செயலாகவும்,  ஆழமான  ஒழுக்கக்கேடான நடத்தையுமாகும். பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் குறித்து விவாதிப்பதற்காக நடந்த ஒரு கூட்டத்தில் நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் போன்ற ஒரு முதுநிலை அரசாங்க அதிகாரி எப்படிப் பங்கேற்க முடியும்?

இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் உடனடியாக விளக்கம் அளித்திட வேண்டும்.” இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.