சென்னை,

தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொங்கல் வாழ்த்துக்கைள தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொங்கல் திருநாள், அறுவடை திருநாள், தமிழர் திருநாள் என்றெல்லாம் கொண்டாடப்படுகிற இந்த விழா இயற்கையோடு இயைந்த மனித வாழ்வின் வெளிப்பாடாகும். அன்றைய தமிழகத்தில் ஆடிப்பட்டம் தேடி விதைத்து, தை மாதத்தில் அறுவடை நடைபெறும். அறுவடையின் துவக்கத்தை புதுப்பானை, புத்தரிசி என கொண்டாடினர் நம்முடைய முன்னோர்கள்.

ஆனால் இன்றைக்கு உழவுத் தொழில் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த ஆண்டு நிலவிய வறட்சியின் பிடியிலிருந்து தமிழகம் இன்னமும் முழுமையாக மீளவில்லை. பெரும்பாலான நீர்நிலைகள் இன்னமும் வறண்டே கிடக்கின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்ட பிறகும் மத்திய மோடி அரசு தமிழகத்திற்கு அப்பட்டமாக வஞ்சனை செய்து வருகிறது. நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற இடங்களில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலங்களை பாழ்படுத்த மத்திய அரசு துடிக்கிறது.

விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவை விட கூடுதலாக 50 சதவிகிதம் விலை வைத்து தருவோம் என்று வாக்குறுதியளித்தார் மோடி. ஆனால் நெல், கரும்பு உள்ளிட்ட எந்த விளைப் பொருளுக்கும் கட்டுப்படியான கிடைக்கவில்லை. மறுபுறம் இடுபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்கிறது.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடியை அள்ளித் தரும் மத்திய அரசு சிறு-குறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. இதனால் கந்து வட்டிக் கொடுமையில் சிக்குகின்றனர் விவசாயிகள்.

நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி கடுமையாக வெட்டி குறைக்கப்பட்டுள்ளது. விவசாயம் முறையாக நடைபெறாத நிலையில் நூறு நாள் வேலைத் திட்டம் தான் விவசாயத் தொழிலாளர்களை ஓரளவு காப்பாற்றி வருகிறது. கூலி மறுப்பு, வேலை நாட்களை குறைப்பது என விவசாயத் தொழிலாளர்களை ஏமாற்றுகிறது மோடி அரசு.
தமிழகத்தின் தென் மாவட்டங்களை ஒகி புயல் கடுமையாகத் தாக்கியது. ஏராளமான மீனவர்கள் உயிரிழந்தனர். அவர்களில் பலரின் கதி என்ன என்றே தெரியவில்லை. விவசாயிகளும், பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கூட மத்திய, மாநில அரசுகள் காட்டிய அலட்சியம் சகிக்க முடியாது.

தமிழக கிராமங்கள் கொஞ்சம், கொஞ்சமாக களையிழந்து வருகின்றன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கிராமங்களை விட்டு வெளியேறி அத்தக் கூலிகளாக நகரங்களில் குடியேறும் அவல நிலை தொடர்கிறது.

தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு எதையும் தட்டிக் கேட்க திராணியில்லா அரசாக உள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகள் கொஞ்சம், கொஞ்சமாக பறிக்கப்படுகின்றன. குறிப்பாக இந்தி – சமஸ்கிருத மொழி திணிப்பு, நீட் தேர்வு, கீழடி ஆய்வுக்கு மூடு விழா என அடுத்தடுத்து மத்திய அரசினால் தமிழகத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது.

பன்முக பண்பாடு தான் இந்தியாவின் சிறப்பு. ஆனால், ஒற்றை ஆதிக்க பண்பாட்டை திணிக்கிறது மோடி அரசு. வரலாற்றை மறைக்க முயலும் வஞ்சகத்தின் ஒரு பகுதி தான் கீழடி ஆய்வுக்கு அனுமதி மறுப்பது ஆகும்.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை வந்த பொழுது தமிழகமே எழுந்துநின்று போராடியது. இதன் காரணமாகவே ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டது. இந்த போராட்டக் குணம் பாராட்டத்தக்கது. குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் இந்த போராட்டத்தில் முன்நின்றனர். தமிழக மக்களை பாதிக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இத்தகைய போராட்டங்கள் தான் தீர்வாகும்.

தைத் திருநாள் என்பது உழைப்பை, உழைப்பவரை உற்சாகப்படுத்தும் திருவிழா ஆகும். இந்த உலகம் உழைப்பவருக்கே உரியது என்பதை ஓங்கி உரைக்கும் திருநாளில் இந்தியாவின் பன்முக பண்பாட்டை பாதுகாக்கவும், தமிழ், தமிழரின் உரிமைகளை காத்து நிற்கவும், விவசாயம், விவசாயிகளை பாதுகாக்கவும் தொடர்ந்து பாடுபடுவோம் என்று கூறி பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: