நாக்பூர்;
மாணவிகளை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய பள்ளிக்கூட காவலருக்கு தூக்கு தண்டனை விதித்து, மகாராஷ்டிரா மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டம் பந்துர்ணா கிராமத்தில் உள்ள உண்டு- உறைவிட பள்ளிக்கூடத்தில், நூற்றுக்கணக்கான மாணவ – மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் ராஜ்குமார் என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு ராஜ்குமார், பள்ளியில் தங்கிப் படித்து வந்த 2 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தனக்கு நேர்ந்த அவலத்தை பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரும் சிக்கினார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில்தான், ராஜ்குமாருக்கு தூக்குத் தண்டனை வழங்கி, நேற்று வார்தா நீதிமன்றம் நீதிபதி அஞ்சு ஷிண்டே தீர்ப்பு வழங்கியுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த நபருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.