புதுதில்லி;
நாப்கின்களுக்கு கூட 12 சதவிகித ஜிஎஸ்டி வரி விதித்து மோசமான சாதனை படைத்த அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது.இந்நிலையில், மோடி அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு பட்டியலில், மாடு கட்டப் பயன்படுத்தும் தாம்புக் கயிறும் கூட தப்பவில்லை என்பதும், இதனால், ஒரே ஆண்டில் கயிற்றின் விலை ரூ. 50 உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மாட்டுப் பொங்கல் நாளில் கால்நடைகளை குளிப்பாட்டி அழகுபடுத்தி, புதுக்கயிறு மாற்றி, சலங்கை, ஜிகினா மாலைகள் கட்டி ஊர்வலம் விடுவது காலம் காலமாக நடந்து வருவதாகும். முன்னதாக மணிகள், சங்குகள், பல வண்ண கயிறுகளை கழுத்தில் கட்டி கொம்புகளில் வர்ணம் பூசி மாடுகளை அலங்கரிப்பார்கள். இதைக் கருத்தில் கொண்டே, தமிழகம் முழுவதும் கடைகளில் பொங்கல் பொருட்கள் குவிந்துள்ளன. குறிப்பாக, மாடுகளுக்கு அணிவிக்கப்படும் கயிறுகள் அதிகளவில் குவிந்துள்ளன.

ஆனால், சலங்கை மணிகள், சங்கு கயிறுகளின் விலை 30 சதவிகிதம் உயர்ந்துள்ளதால், போதிய வியாபாரம் நடக்கவில்லை. கடந்தாண்டு ரூ. 100-க்கு விற்கப்பட்ட கயிற்றின் விலை, இந்த ஆண்டு ரூ. 150 என்பதால், கயிறு வாங்கும் விவசாயிகளின் சதவிகிதம் கணிசமாக குறைந்துவிட்டது.கயிறுகள், சங்கு, மணிகள் விலை உயர்ந்ததற்கு, ஜி.எஸ்.டி வரி விதிப்பே காரணம் என்று கூறும் வியாபாரிகள், ஜிஎஸ்டி மற்றும் விலை உயர்வு காரணமாக, எதிர்பார்த்த அளவிற்கு கயிறு உள்ளிட்டவற்றின் வியாபாரம் நடக்கவில்லை என்றும், விலை விசாரிக்கும் விவசாயிகள், விலையைச் சொன்னதும் அதிர்ச்சி அடைவதாகவும் புலம்புகின்றனர்.

Leave A Reply