மும்பை;
பீமா கோரேகானில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-தான் காரணம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மகாராஷ்டிரா மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள புல்தானா மாவட்டத்தின் சிந்துஹெத் பகுதியில் உள்ள மகாராஷ்டிர மன்னர் சத்ரபதி சிவாஜியின் தாயார் ராஜமாதா ஜீஜாபாய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், “புனேயில் பீமா-கோரேகான் பகுதியில் ஏற்பட்ட கலவரத்திற்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜக-வும்தான் காரணம். ஜாதி மற்றும் மத ரீதியாக கலவரங்களை ஏற்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலை இவர்கள் செய்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது”என்றார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வியின் தரம் மிகவும் மோசமாக பின்தங்கி உள்ளதாகவும், இங்கு ஏராளமான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருவதாகவும் கூறிய கெஜ்ரிவால், மகாராஷ்டிர மாநில பாஜக ஆட்சியின் அவலத்திற்கு இதுவே சாட்சி என்றார்.

பருவமழை பொய்த்து வறட்சியால் பாதிப்பு அடைந்த தில்லி விவசாயிகளுக்கு, தில்லி அரசு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கியிருப்பதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Leave A Reply