புதுதில்லி;
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர் சிர்பேந்திரா மிஸ்ராவை சந்திக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மறுத்துள்ளார்.உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தன்னிச்சையாக நடந்து கொள்கிறார் என்று உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், செலமேஸ்வர், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று அதிரடிக் குற்றச்சாட்டை வைத்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் அண்மைக் காலமாக விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதாகவும், இந்த நிலைமை நீடித்தால், ஜனநாயகம் நிலைக்காது என்றும் தெரிவித்த அவர்கள், தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, தீபக் மிஸ்ராவுக்கு எழுதிய கடிதத்தையும் வெளியிட்டனர்.

இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், மூத்த நீதிபதிகள் கூடி, தலைமை நீதிபதிக்கு எதிராக பகிரங்கமாக ஊடகங்கள் மத்தியில் பேசியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து பிரதமர் மோடி மத்திய சட்டத்துறை ரவிசங்கர் பிரசாத்துடன் அவசர ஆலோசனை நடத்தினார். பாஜக தலைவர் அமித்ஷா மீதான சோராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பாகவும் நான்கு நீதிபதிகள் சந்தேகம் எழுப்பி இருந்ததால், அதுபற்றியும் விவாதித்தனர்.

எனினும், மத்திய சட்டத்துறை இணையமைச்சர் பி.பி. சவுத்ரி அளித்த பேட்டியில், “இந்திய நீதித்துறை உலக அளவில் புகழ் பெற்றது, சுதந்திரமானது. அது தனது பிரச்சினையை தானே தீர்த்துக் கொள்ளும்; இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது” என்று கூறினார்.
இதனிடையே, பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளர் சிர்பேந்திரா மிஸ்ரா, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைச் சந்திக்க இன்று சென்றார். மூத்த நீதிபதிகளின் குற்றச்சாட்டு குறித்து, தீபக் மிஸ்ராவுடன் ஆலோசனை நடத்துவதற்காகவே அவர் அனுப்பி வைக்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

]ஆனால் சிர்பேந்திர மிஸ்ராவைச் சந்திக்க, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திடீரென மறுத்து விட்டதாக தற்போது bச்யதி வெளியாகியுள்ளது. இதனால், தீபக் மிஸ்ராவைச் சந்திக்காமலேயே சிர்பேந்திர மிஸ்ரா திருப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.