தமிழக அரசுப்பணிகளில் வெளிமாநிலத்தோர் நியமனத்தை தடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறத்து கட்சியின் மாநிலத் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம், அரசுப்பணியாளர் தேர்வாணையம் (என்.பி.எஸ்.சி) மூலம் வெளி மாநிலத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும் 1952 ஆம் ஆண்டிலிருந்து நடப்பதாகவும், அனைத்து மாநிலங்களிலும் இந்த நடைமுறை உள்ளதாகவும், 2011லிருந்து 30 வெளிமாநிலத்தவர் அரசுப்பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல மாநிலங்களில் அரசுப்பணி நியமனங்கள் குறைக்கப்பட்டுவருகின்றன. பல மாநிலங்களில், தமிழ்நாட்டில் இருப்பது போல அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமே அகற்றப்பட்டு, அரசுப்பணிகள் ஒப்பந்த அடிப்படையிலும், அவுட் சோர்சிங் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுகின்றன. நிரந்தரப் பணிகளில் நியமனம் நிறுத்தப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகள் பின்பற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக வேலை வாய்ப்புக்கள் பெருமளவுக்கு குறைந்து அனைத்து மாநிலங்களிலும் வேலையின்மை தாண்டவமாடிவருகிறது.

தமிழகத்தில் அரசு ஊழியர் சங்கப் போராட்டங்கள் காரணமாக ஓரளவு காலியிடங்களில் பணி நியமனங்கள் நடந்துவருகின்றன. தர்போதும் கூட 9351 குரூப் 4 காலியிடங்கள் நிரப்பிட விண்ணப்பங்கள் பெறப்பட்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வெளி மாநிலத்தவர்கள் பணியில் சேர்வது தற்போதைக்கு குறைவாக இருந்தாலும், பல மாநிலங்களில் வேலை நியமனம் இல்லாத சூழலில் தமிழகத்தில் உள்ள பணிகளில் சேரும் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கக் கூடும்.

தர்போது தமிழகத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியை எட்டிவருகின்ற நிலையில் இங்குள்ள சிறு அளவிலான வேலைவாய்ப்புக்களும் குறைக்கப்படும் நிலை இளைஞர்களுக்கு பாதிப்பை உருவாக்கும். அத்துடன், கிராமப்புற மக்களோடு நெருக்கமாகப் பணியாற்றவேண்டிய வி.ஏ.ஓ பணிகளுக்கு தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்களை பணிக்கு எடுத்தால் கிராமப்புற மக்களின் பிரச்சனைகளுக்கு அணுகுவதில் சிக்கல் ஏற்படும்.

எனவே, தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உறுதி செய்திடும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேர்கொள்ளவேண்டுமென தமிழக அரசை, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: