காவிரி டெல்டா பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், மற்றொரு புறத்தில் ஏற்கெனவே சாகுபடி செய்த நெல்லை விற்பதற்கான கொள்முதல் நிலையங்கள் இல்லாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அனையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு தற்போது 2500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 5 லட்சம் ஏக்கரில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து, கடந்த 2017 அக்டோபர் 2 முதல் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. பின்னர் அவ்வப்போது பெய்த மழையை பொறுத்து நீர்திறப்பு அதிகரிப்பதும், குறைவதுமாக மாறியது.
அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் அதிகமாக இருந்தபோது, கால்வாய் பாசனத்திற்கும் நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து சரிந்த நிலையிலும் தொடர்ந்து நீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

தற்போதைய நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 104 கன அடி நீர், வந்து கொண்டுள்ளது. நீர்மட்டம் 56.80 அடியாகவும், நீர் இருப்பு 22.30 டி.எம்.சி-யாகவும் உள்ளது.
குடிநீர் தேவை மற்றும் எதிர்கால வேளாண்பணிகளுக்கான தேவையைக் கருத்தில் கொண்டு டெல்டா பாசனத்திற்கு, திறக்கப்படும் நீரின் அளவும் 10 ஆயிரம் கன அடியிலிருந்து 2 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டு விட்டது.ஆனால், 2 ஆயிரத்து 500 கன அடிநீர், கல்லணையை வந்தடையும் போது, 1500 கன அடியாக குறைய வாய்ப்புள்ளது என்பதால், இது பாசனத்திற்கு போதுமானதாக இருக்காது என்று விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் 5 லட்சம் ஏக்கர் வரை சம்பா பயிர்கள் கருகும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

வழக்கமாக சம்பா சாகுபடிக்கு ஜனவரி 28-ஆம் தேதி வரை நீர் திறக்கப்படும். தற்போது நீர் திறப்புகுறைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் நிலைகுலைந்து உள்ளனர்.மறுபுறத்தில் இன்னொரு பிரச்சனையும் விவசாயிகளை அலைக்கழித்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பம்புசெட்டு பாசனம் மூலம் முன்கூட்டியே 2.5 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் இப்போது அறுவடையைத் துவங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு தேவையான அளவுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை. ஒருசில இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, நாகை மாவட்டத்தில் இதுவரை நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கெனவே இயங்கிவந்த 23 நெல் கொள்முதல் நிலையங்களும் தஞ்சை மாவட்டத்தில் 25 நெல் கொள்முதல் நிலையங்களும் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன.

போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை, அரசு திறக்காததால் அறுவடை செய்யப்பட்டநெல்லை தனியாரிடம் விற்பனை செய்யவேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஈரப்பதம் 17 சதவிகிதம் வரை உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். இப்போது பனிக்காலம் என்பதால் அறுவடை செய்யப்பட்ட நெல்லில் ஈரப்பதம் 20 சதவிகிதம் வரை உள்ளது. ஆகவே, 22 சதவிகிதமாக ஈரப்பத அளவை உயர்த்தி அறிவித்தால்தான் விவசாயிகள் அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய முடியும் என்ற சூழல் உள்ளது.
நெல்லுக்கான விலையும் போதுமானதாக இல்லை. இந்தாண்டு நெல் கொள்முதல் விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரமாக வழங்க வேண்டுமென்று விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

மத்திய அரசு குவிண்டால் ஒன்றுக்கு கிரேடு ‘ஏ’ ரக நெல்லுக்கு ரூ. 1590 என்றும், பொது ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1550 என்றும் அறிவித்துள்ளதால், மாநில அரசு ஊக்கத்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆனால் கிரேடு ‘ஏ’ ரகத்துக்கு ரூ. 70-உம், பொது ரக நெல்லுக்கு ரூ. 50-உம் ஊக்கத் தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் கிரேடு ‘ஏ’ ரகநெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1660-ம், பொதுரக நெல்லுக்கு ரூ. 1600 என்றும் விலை வழங்கப்படுகிறது.

அரசு அறிவிப்புப்படி நெல் கொள்முதல் விலை 60 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ. 996 என்பதாக இருந்தாலும் நெல்லை தூற்றுவது, எடைபோடுவது, டிரான்ஸ்போர்ட் ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி என்று பல முறைகேடுகளினால் விவசாயிகளுக்கு ரூ. 96 வரை இழப்பு ஏற்படுகிறது. மீதி ரூ. 900 மட்டுமே கிடைக்கிறது.தனியாரோ 60 கிலோ நெல் மூட்டை ஒன்றுக்குரூ 920 முதல் ரூ 950 வரை விலை தருவதால், விவசாயிகள் தனியாரிடமே விற்பனை செய்ய விரும்புகின்றனர். அரசின் கொள்முதல் விலைக்குறைப்பானது, திட்டமிட்டு தனியாரை நோக்கி விவசாயிகளை தள்ளிவிடும் ஏற்பாடாகவே உள்ளது. போதுமான அளவுக்கு நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறக்காமல் இருப்பதற்கும் இதுதான் காரணமா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், தனியார் வியாபாரிகள் அதிகம் லாபம் அடைகின்றனர். விவசாயிகளுக்கு இழப்புதான் ஏற்படுகிறது.

எனவே, போதுமான கொள்முதல் நிலையங்களைத் திறந்து நெல் கொள்முதலுக்கான ஏற்பாடுகளைச் செய்வதுடன், ஈரப்பதத்திற்கான சதவிகிதத்தை அதிகரித்து, கொள்முதல் விலையையும் உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5 லட்சம் ஏக்கரில் கருகும் நிலையில் இருக்கும் பயிர்களைக் காப்பாற்ற, மத்திய அரசின் மூலம் கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி உரிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும். இவையே டெல்டா மாவட்ட விவசாயிகளைப் பாதுகாப்பதாக அமையும்.
– ஐ.வி. நாகராஜன்

Leave a Reply

You must be logged in to post a comment.