====சி.ஸ்ரீராமுலு====
“ஜார்க்கண்டில் எங்கள் கால்கள் பதிக்காத மைதானங்களே கிடையாது. அனைத்து மைதானங்களிலும் விளையாடி வெற்றிக்கொடி ஏற்றியிருக்கிறோம். திசைகள் எங்கும் சென்று வெற்றியுடன் திரும்புகிறார். இதனால் எங்கள் அமைப்புக்கு இனி வேலை இருக்காது”
இப்படிச் சொல்லுவது ஓர் இந்தியர் என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அவர் அமெரிக்காவை சேர்ந்த சிறுபான்மை கிருத்துவர் என்றால் நினைத்துப்பாருங்கள்!வடக்கில் பீகார், தெற்கில் கொல்கத்தா, மேற்கில் ஒடிசா, வட மேற்கில் உத்தரபப்பிரதேசத்தை எல்லைகளாக கொண்டு உதயமான மாநிலம் ஜார்க்கண்ட். வரும் 15 ஆம் தேதி 18-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இது 33 லட்சம் மக்கள் தொகையை உள்ளடக்கிய சிறிய மாநிலங்களில் ஒன்று.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று கொடுத்த இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஜெய்பால் சிங், கிரிக்கெட்டில் இரண்டாவது முறை உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் வீரர் மகேந்திர சிங் தோனி, வில் வித்தை நாயகி தீபிகாகுமாரி என ஏராளமான விளை யாட்டு வீரர்களை உருவாக்கிய மாநிலம் என்ற பெருமைகளை கொண்டது. வெளியிலிருந்து பார்ப்பதற்குதான் ஜார்க்கண்ட் மாநிலம் அழகையும், அமைதியான தோற்றத்தையும் கொடுக்கும். ஆனால், பீகார் மாநிலத்திலிருந்து தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு 15 ஆண்டுகளை கடந்தும், அங்குள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் இல்லை.

81 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலம், 2000 ஆம் ஆண்டு முதல் 2014 வரைக்கும் 4 பொதுத் தேர்தலை சந்தித்துள்ளது. பாபுலால் மராண்டி, அர்ஜூன் முண்டா, சிபுசோரன், மதுகோடா, ஹமன்ட் சோரான், ரகுபீர் தாஸ் என 6 முதல்வர்களைக் கண்டுள்ளது. இப்போதும் பாஜகவின் ஆட்சிதான்.

மலைப்பிரதேசமான இங்கு பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். அதிலும், ஒவ்வொரு மலையிலும் ஒரு பிரிவினர் வாழ்கிறார்கள். கல்வி, சுகாதாரம், மருத்துவம் என எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கவில்லை பாஜக அரசு. (கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற பிறகுதான் தோனியின் சொந்த ஊருக்கே சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டது தனிக்கதை.)கல்வியில் வளர்ச்சியில்லை. 25 விழுக்காடுதான் படித்தவர்கள். வேலையும் இல்லை. வறுமை கோரத்தாண்டவமாடுவதால் பழங்குடிப் பெண்கள் இளம் வயதிலேயே வீட்டு வேலைகளுக்கும் செல்லும் அவலம். இதைவிடக் கொடுமை, பாலியல் துன்புறுத்தல் அதிகரித்துள்ளது. வீட்டை விட்டு வெளியில் வந்தால் உயிருடன் திரும்ப முடியாது. இதுதான் ‘டிஜிட்டில் இந்தியா’வின் மாடல்.

இந்த சூழ்நிலையில்தான், பழங்குடியின மக்களின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக ராஞ்சிக்கு வந்தார் பிரான்ஸ் கெஸ்லர். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இவர் சமூக ஆர்வலர், ஆசிரியர் என்பதையும் தாண்டி ஜூடோ, பனிச் சறுக்கு, ஐஸ் ஹாக்கி பயிற்சியாளர் வீரர்.
தனது ஆராய்ச்சிப் பணிக்காக ராஞ்சியில் உள்ள ஹட்டப், கர்மா, கோய்லாரி, ருக்கா என பல்வேறு கிராமங்களுக்கு சென்றார். முழுக்க முழுக்க பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள். அங்கு, பெண் குழந்தைகள் பத்து வயதை எட்டுவதற்குள் 25 வயது இளைஞர்க ளுக்கு மணம் முடிக்கும் சிறார் திருமணம் மிக சர்வ சாதாரண மாக நடக்கும் விபரீதம் கண்டு அதிர்ந்துபோனார் கெஸ்லர். கட்டாய சிறார் திருமணத்திற்கு காரணம், கல்வி அறிவு இல்லாதது தான். அதற்கு முற்றுப் புள்ளி வைக்க முதலில் கல்வி நிறுவனங்களை துவக்க முடிவு செய்த அந்த இளைஞர், தனது நாட்டிலுள்ள நண்பர்களின் உதவியை நாடினார். உதவியும் கிடைத்தது. ‘யுவ இந்தியா’ என்ற தன்னார்வ அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் பள்ளிக்கூடங்களை திறந்தார். பழங்குடியின மக்களுக்கு ‘கல்விக் கூடங்கள் சிறைச்சாலைகளாக’தெரிந்துள்ளது. ஒருவரும் தங்களது பிள்ளைகளை சேர்க்கவில்லை. அவர் மனம் தளரவில்லை.

ராஞ்சி கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர். அதனால் கிரிக்கெட்டுக்கு ஏகபோக வரவேற்பு. வசதியிருப்பவர்கள் காசு கொடுத்து பயிற்சி பெறுகிறார்கள். பணம் இல்லாதவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அந்த ஊரில் படிப்போடு விளையாட் டையும் கற்றுக்கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார் கெஸ்லர். ஆரம்பத்தில் 20 முதல் 50 பேர் சேர்ந்தனர். படிப்பதைக் காட்டிலும் கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டினர். காலை 11 மணி முதல் மதியம் வரை அறிவியல், ஆங்கிலம், கணினி வகுப்புகள். மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும் விளையாட்டுப் பயிற்சி கொடுத்துள்ளார். விளையாட்டுப் பயிற்சிக்காக 200 பேர் வரைக்கும் சேர்ந்துள்ளனர்.மலை, அடர்ந்த காடுகளில் விளையாடுவதற்கும் கால்பந்து பயிற்சிக்கும் போதிய மைதான வசதி கிடையாது. காட்டின் ஒதுக்குப்புறத்தில் ஓர் இடத்தை கண்டுபிடித்து,அதை சுத்தப்படுத்தி மைதானமாக உருவாக்கினார். முழுக்க முழுக்க பழங்குடியின பெண்களை கொண்ட ‘யுவா இந்தியா’ கால்பந்து அணியை உருவாக்கினார். மாநில எல்லைகளைத் தாண்டி கொல்கத்தாவின் பாரம்பரியமான அணிகளையும் எதிர்த்து விளையாடி வெற்றி மேல் வெற்றிகளை குவித்தனர்.

இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மான்செஸ்டர் லீக் தொடர், அமெரிக்காவில் உள்ள ஸ்க்வான்ஸ் யுஎஸ்ஏ கோப்பை போட்டிகளில் கலந்து கொண்ட முதல் இந்திய அணி என்ற பெருமைகளோடு களம் இறங்கிய யுவா இந்தியா அணியினர் கனடா, துபாய் என பல்வேறு நாடுகளை துவம்சம் செய்து வெற்றி பெற்றனர்.அடுக்கான வெற்றிகளால் பழங்குடியின மக்களுக்கு புதிய வெளிச் சம் கிடைத்தது. அதில் கிடைத்த பரிசுத்தொகையைக் கொண்டு நவீன பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் கட்டிக் அமைத்திருக்கிறார்கள்.

ஜார்க்கண்டில் பழங்குடி பெண்களுக்கு கால்பந்து பயிற்சியும், தரமான கல்வியும் எளிதில் கிடைக்கவில்லை. கடுமையான உழைப்பு, சவால்களை எதிர்கொண்டனர். தற்போது அவர்கள் தொழில்துறை கால்பந்து வீரர்களாக வலம் வருகிறார்கள்.யுவா இந்தியா அணியிலிருந்து மூன்று பெண்கள் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். 19 பெண்கள் ஜார்க்கண்ட் மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, அதில் 16 வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்கள். தற்போது ஆண்கள் அணியும் தயாராகிவிட்டது!
இவர்களில் 16 வயதாகும் இளம் வீராங்கனை பினிடோ, 13 வயதில் தனது துள்ளல், கிக்குகளால் கோல் கீப்பராக மாறியுள்ளார். அதோடு மட்டுமல்ல தனது குடும்பத்தையே பாடசாலைக்கு கொண்டு வந்துள்ளார். டாட்டா கால்பந்து, பாயிசங் புட்டியா கால்பந்து பள்ளிக்கும் சென்று தனது யுத்திகளை மேம்படுத்திக்கொண்டார்.

அருகிலுள்ள ஒரு பள்ளியில் உதவியாளராக பணிபுரியும் பிரிட்டோவின் தாய் சுந்தோ தேவி, தனது மகளின் சாதனைகளைக் கண்டு பெருமிதம் கொள்கிறார். ஏன் என்றால் அவரது மூத்த மகள் தங்களது சமூக நெறிமுறைகளின்படி இளம் வயதில் திருமணம் செய்து கொண்டாலும் இளைய மகள், அவர் விரும்பு வரைக்கும் படிக்கலாம் என்பதால்தான்.பினிட்டோ மட்டுமல்ல அவரது நண்பர்கள் சீமா, உஷா என 300 இளம் பெண்கள் புதுவாழ்வு பெற்றுள்ளனர். 16 வயதுகுட்பட்ட பெண்கள் பாடசாலைக்கு செல்கிறார்கள். அருகிலுள்ள மைதானத் திற்கு சென்று விளையாடுகிறார்கள். இந்த நடவடிக்கை பழங்குடி பெண்களுக்கு கால்பந்து சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் அளித்துள்ளது. விளையாட்டுடன் படிப்பு என்பது காலத்தின் விசித்திர விளையாட்டுதான்.

Leave a Reply

You must be logged in to post a comment.