உற்சாகம் கரைபுரள உழவர் திருநாளை
ஊரெங்கும் கூடிக்கொண்டாட பேராசை எமக்கு !
தமிழர்பண்பாடு தரணிக்கே விளக்காகி வழிகாட்ட!
விழிப்புற்ற தமிழராய் வீதியெங்கும் குலவையிட ஆசை !காங்கிரீட்காடுகளில் தொலைத்துவிட்ட உழவின் ரேகைகளை
புதை பொருளாய்த் தேடிக்கொண்டே இருக்கையிலே!
பசுமை போர்த்திய வண்டல் நிலமெல்லாம்
வறண்டு வெடித்து வாய்பிளந்து கிடக்கையிலே !
[உற்சாகம்…]

ஆறிருந்த இடமென்றும் குளமிருந்த இடமென்றும்
வயலிருந்த இடமென்றும் தோப்பிருந்த இடமென்றும்
மலையிருந்த இடமென்றும் மடுவிருந்த இடமென்றும்
வளரும் தலைமுறைக்கு வரைபடத்தைக் காட்டுகிறோம் !!
[உற்சாகம்…]

கணக்குப்பார்த்த உழவன் கண்ணீரில் வீழந்தகதை
விதைத்தவன் அறுக்காமல் வெந்து துடித்தகதை
கன்கட்ட முடியாமல் தன்னுயிரை மாய்த்தகதை
கண்ணீராய்ப் பொங்கவோ வந்ததின்ற தைப்பொங்கல் !
[உற்சாகம்…]

கார்ப்பரேட் கொள்ளைக்கு கழனியைப் பறிகொடுத்தோம் !
ஆளவந்தார் பொய்களிலே வாழ்வை இழந்துவிட்டோம் !
சாதிமத பெருநோயில் சண்டையிட்டு மாய்ந்தோம் !
தமிழர் புத்தாண்டை எதைச்சொல்லிக் கொண்டாட ?
[உற்சாகம் …]

புராணப்புளுகுகளில் சொந்தபுத்தியை தொலைத்துவிட்டு !
பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்பதையும்விட்டு !
வரலாற்றை அறிவியலை காவிச்சேற்றில் மூழ்கவிட்டு!
வாழுவதின் பயனென்ன ? தைப்பொங்கல் ஏன் எதற்கு “?
[உற்சாகம் …]அழுது பார்த்தோம் தொழுது பார்த்தோம் ஆகவில்லை எதுவும்!
இற்றுப்போகவில்லை ! இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை!
சாதியற்ற தமிழராய் வீடுதோறும் வீதிதோறும் எழுவோம்
காவியற்ற கண்ணீரற்ற தமிழகத்தை தலைமுறைக்கு தருவோம்
[உற்சாகம் …]

வியர்வைக் குலமிங்கு வீறுகொண்டு எழுந்துவிட்டால்
யார் எதிரி என்பதனை இனங்கண்டு தெளிந்துவிட்டால்
போர்முழக்கம் கூராகும் ! சேரியும் ஊரும் ஒன்றாகும்!
பொன்னுலகம் நமதாகும் ! பொங்கட்டும் தைப்பொங்கல் !!
[உற்சாகம் …]

Leave a Reply

You must be logged in to post a comment.