ஈரோடு மாவட்டத்தில் வாய்க்கால்களும் பல கிளை வாய்க்கால்களும் உள்ளன. இதில் பிரதான வாய்க்கால்களாக கீழ்பவானி வாய்க்கால், காளிங்கராயன் வாயக்கால், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்கால் இருந்து வருகிறது. இதில் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலமும், காளிங்கராயன் வாய்க்கால் மூலம் 15 ஆயிரத்து 750 ஏக்கர் நிலமும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் 24 ஆயிரத்து 725 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெற்று வருகிறது.

தற்போது பாசனத்திற்காக இந்த 3 வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தண்ணீர் எல்லாம் கடை மடிக்கு போய் சேருவதற்குள் திறக்கப்பட்ட தண்ணீர் அனைத்தும் வற்றிவிடுகிறது. தற்போதும் சில கிளை வாய்க்காலில் முழுதாக தண்ணீர் போய் சேரவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலைக்கு முக்கிய காரணமாக இருப்பது வாய்க்கால்களில் அதிக அளவில் வளர்ந்து கிடக்கும் செடி, கொடிகளாகும். சில இடங்களில் அவை மரமாகவும் வளர்ந்து புதர் மண்டியல்ல, காடாக காட்சியளிக்கிறது. பல பகுதிகளில் இது கீழ்பவானி வாய்க்கால் என்று கூறினால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு வாய்க்கால் முழுவதும் புதர் மண்டி கிடக்கிறது.

மேலும், இந்த வாய்க்கால்களில் குப்பைகளும் வாரி இறைக்கப்பட்டு கிடக்கிறது. பாலிதீன்பைகள், கவர்கள்,மது பாட்டில்கள் என குவிந்து கிடக்கிறது. விவசாய நிலங்களை செழிக்க வைக்க பாய்ந்து வரும் தண்ணீர் இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டுதான் கடந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. இவ்வாறு வாய்க்காலில் தண்ணீர் ஓட்டத்தை தடுக்கும் வகையில் வளர்ந்து கிடக்கும் இந்த புதர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய அரசு நிர்வாகமோ அதுகுறித்தான எவ்வித அக்கறையும் இன்றி கிடக்கிறது. ஆகவே, நீர் வழிபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்தால் மட்டுமே விவசாயத்திற்காக விடப்பட்ட தண்ணீர் விவசாய நிலங்களுக்கு தடையின்றி முழுதாக சென்றடையும். ஆகவே. இதுதொடர்பான போர்கால நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

லெனின், ஈரோடு.

Leave a Reply

You must be logged in to post a comment.