மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக வள்ளீஸ்வரன் தோட்டம் குடிசைமாற்று வாரிய வீடுகளை இடித்துவிட்டு புதிதாக அரசு கட்டவுள்ளது என்று அக்கட்சியின் மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் பா.நீலகண்டன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வள்ளீஸ்வரன் தோட்ட குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் 1983ல் கட்டப்பட்டது. இந்தவீடுகள் மிகவும் பழுதடைந்து மக்களின் உயிருக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்தது. அவ்வப்போது சில பிளாக்குகளில் மேல்தளம் இடிந்து கீழ் தளத்தில் உள்ளவர்கள் மீது விழுந்தது. பால்கனி மற்றும் படிக்கட்டுகள் உடைந்து பலரின் கை, கால்கள் முறிந்தன. சாக்கடை நீர் கீழ்த்தளத்தில் இருந்த வீடுகளில் தேங்கி நின்றன. 2015 டிசம்பர் பெருமழையால் இந்தக் குடியிருப்புகள் மேலும் பாதிப்புக்குள்ளாகின.

இக்குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வலியுறுத்தி பலகட்ட போராட்டங்கள் நடத்தியும், மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, 2016 நவம்பர் மாதம் சிபிஎம் தலைமையில் மக்கள் ஊர்வலமாகச் சென்று மந்தைவெளியில் உள்ள வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 2017 பிப்ரவரி மாதம் வாரிய மேலாண்மை இயக்குநர் சம்பு கலொலிங்கத்திடம் மனுக்கள் வழங்கப்பட்டன. இதன்தொடர்ச்சியாக அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கையை வலியுறுத்தி ஜன.11 அன்று சட்டமன்றத்தில் மயிலாப்பூர் தொகுதி உறுப்பினர் நடராஜ் பேசியபோது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிதாக 488 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

குடியிருப்பு பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் மற்றும் வாரிய அதிகாரிகளுக்குப் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு, புதிய வீடுகள் 400 சதுர அடியில் அமைக்க வேண்டும். மேலும், 173வது வட்டம் ராஜா முத்தையாபுரம் பகுதியில் பழுதுடைந்துள்ள வீடுகளையும் இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.