வன்முறையை தூண்டும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர்
ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன், உ. வாசுகி, அ.சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1 . போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பாராட்டு 

ரூ. 7000 கோடிக்கு மேல் போக்குவரத்துத் தொழிலாளர் பணத்தை முறைகேடாக  போக்குவரத்துக் கழக செலவிற்குப் பயன்படுத்திக் கொண்டதையும், மாநில அரசின் இதர பொதுத்துறை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 2.57 மடங்கு அடிப்படை ஊதிய உயர்வை வழங்க மறுத்ததையும் எதிர்த்து அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 4.1.18லிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அரசின் அடக்குமுறைகளையும், சிறுபான்மை சங்கங்களைக் கொண்டு சட்டவிரோதமாக போடப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்த்தும், தொழிலாளர்களின் கூட்டுப்பேர உரிமையை நிலைநாட்டவும் நடந்த இந்த நியாயமான போராட்டம் அரசின் தவறான அணுகுமுறையால் தான் வெடித்தது.

போராடிய தொழிலளர்களின் உறுதியையும், தொழிலாளிகளின் நியாயமான
போராட்டத்தினால் சிரமம் இருந்தும் பேராதரவு நல்கிய பொதுமக்களையும், போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு இயக்கங்கள் நடத்திய இதர பிரிவு தொழிலாளர் அமைப்புகள், மத்திய தர ஊழியர் சங்கங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மனமார பாராட்டுகிறது. பேச்சுவார்த்தை நடத்தி சுமூக நிலையை உறுதிப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டுமென மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

2. வன்முறையைத் தூண்டும் எச். ராஜாவுக்கு கண்டனம்

“தமிழை ஆண்டாள்” என்ற கவிஞர். திரு. வைரமுத்துவின் தினமணி கட்டுரையை முன்வைத்து பாஜகவின் தேசிய செயலாளர் திரு. எச். ராஜா, திரு.வைரமுத்து அவர்களையும், கம்யூனிஸ்ட்டுகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளையும், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களையும் அநாகரீகமான முறையில் அவதூறு செய்ததோடு வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும்
பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருக்கிறார். மிகக் கடுமையான முறையில் தனிநபர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான திரு. எச். ராஜாவின் பேச்சை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இதற்கு முன்னரும் திரு.எச்.ராஜா இதுபோன்று சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கிற, சமூகப் பதட்டத்தை உருவாக்குகிற பல பேச்சுக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். அவரது பேச்சு மாற்றுக் கருத்துள்ள படைப்புகள், பேச்சுக்கள் ஆகியவற்றை முன்வைப்போருக்கு எதிரான நேரடியான மிரட்டலாகவே அமைந்திருக்கிறது. மாற்றுக் கருத்துக்களை ஆரோக்கியமாக விவாதிப்பதற்கு பதிலாக கொலைவெறியைத் தூண்டும்
வகையில் அவர் தொடர்ச்சியாக பேசி வருவதை திட்டமிட்ட முறையில் தமிழகத்தில் சாதி, மத மோதலை உருவாக்குவதற்கு வழிவகுப்பதாக உள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன், நடிகர் விஜய், இப்போது கவிஞர் வைரமுத்து என்று அவரது வன்முறை பேச்சும், கொலைவெறி மிரட்டல்களும் அத்துமீறிதொடர்வது இதை திட்டமிட்டே அவர் செய்து வருகிறார் என்பதன்
வெளிப்பாடே ஆகும்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு தனிநபர்களுக்கு இடையே நடந்த
மோதலை இரண்டு சமூகங்களுக்கு இடையிலான மோதல் போன்று சித்தரிக்க
அவர் முயற்சித்தார். இதேபோன்று பாஜகவைச் சார்ந்த திரு. கல்யாணராமனும் தொடர்ந்து
வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். கவிஞர் வைரமுத்துவை அலைபேசியில் அழைத்து அருவருக்கத்தக்க முறையில் மிரட்டியுள்ளார்.

எனவே, அவர்களது இத்தகைய வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களை கண்டிப்பதோடு, தமிழக அரசு உரிய முறையில் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

3. இறக்குமதி மணலிலும் கொள்ளை

தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு ஆற்று மணல் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சிலர் வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்திருக்கின்றனர். ஆனால் அதை விற்பதற்கு மாநில அரசு அனுமதிக்கவில்லை. இந்நிலையில் 08.12.2017 தேதியன்று மாநில அரசு பொதுப்பணித்துறை மூலம் அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் இறக்குமதி செய்யப்படும் மணலும்,
வெளிமாநிலத்திலிருந்து கொண்டு வரப்படும் மணலும் சோதனை செய்யப்படும் என்றும்; பொதுப்பணித்துறையின் மூலமே விற்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரத்தையும், விலையையும் அரசு நிர்ணயிப்பதில் ஆட்சேபணை இல்லை.

ஆனால் கடந்தகால அனுபவத்தை நோக்கினால் அரசு விலை நிர்ணயித்தாலும் இரண்டாம், மூன்றாம் விற்பனை விலை அடிப்படை விலையை விட ஐந்து, ஆறு மடங்கு அதிகமாக விற்கப்பட்டுள்ளது. இதில் அரசு எப்போதும் தலையிட்டதில்லை. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் அரசு அதிகாரத்தில் இருப்போரும், ஆளும் கட்சியினரும் கொள்ளையடிக்கும் வாய்ப்பாகவே அரசு மணல் விற்பனை என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. தங்குதடையற்ற ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க நீதிமன்றம் ஆறுமாதங்களுக்குள் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் மீது அரசு மேல்முறையீட்டிற்கு சென்றிருப்பது, சகாயம் அறிக்கை , ககன்தீப்சிங்பேடி அறிக்கை ஆகியவற்றிற்கு நேர்ந்த கதியின் பின்னணியில் பொதுப்பணித்துறையின் இந்த உத்தரவு நேர்மையான நோக்கத்துடன் கூடியது என நம்ப இயலவில்லை. எனவே மாநில அரசு உடனடியாக இறக்குமதி மணலுக்கு விலை நிர்ணயித்துவிற்க அனுமதிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

4. பட்டாசுத் தொழிலை பாதுகாத்திடுக

பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடுகிறது என்று உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களிலிருந்து சிவகாசிக்கு ஆர்டர், அட்வான்ஸ் கிடைக்கவில்லை என்று கூறி டிசம்பர் 26-ந் தேதி முதல் விருதுநகர் மாவட்டத்தில் 850க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள்
மூடப்பட்டுள்ளன. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மூன்று லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு சார்ந்த தொழிலையும் சேர்த்தால் சுமார் 8 லட்சம் பேர் இந்த பிரச்சனை காரணமாக வேலையிழந்து தவிக்கின்றனர்.

சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட பட்டாசு தொழிலாளர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. ஏனைய தொழிற்சங்கங்களும், பட்டாசு தொழிலாளர்களும், உற்பத்தியாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவாக போராடி வருகின்றனர். கடந்த 18 தினங்களாக வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் மத்திய,
மாநில அரசுகள் எவ்வித தலையீடும் செய்யவில்லை.

எனவே சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வேலையிழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகளும், பட்டாசு
உற்பத்தியாளர்களும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave A Reply

%d bloggers like this: