கூடலூர், ஜன.12-
வனத்துறை அதிகாரிகளை கண்டித்து கூடலூரில் மாவட்ட வன அலுவலர் அலுவலத்தை அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்போரின் இல்லங்களில் கழிப்பிடம் கட்ட மத்திய,மாநில அரசுகள் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன. இதையொட்டி பயனாளிகள் கழிப்பிடம் கட்டுவதற்கான கட்டு
மான பொருட்களை அப்பகுதியில் உள்ள வனத்துறை சோதனை சாவடி வழியாகத்தான் எடுத்து வரவேண்டும். ஆனால், இந்த கட்டுமானப் பொருட்களை அவ்வழியே எடுத்துச் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் பல இல்லங்களில் கழிப்பிடம் கட்டும் பணிகள் அனைத்தும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் வெள்ளியன்று அனைத்து அரசியல் கட்சியினர் தலைமையில் கூடலூரில் உள்ள மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட வன அலுவலர் வந்து பேச்சுவார்த்தை நடத்தாத வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என உறுதிபட தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி வெள்ளியன்று மாலை 7 மணியளவில் ஈட்டிமூல பகுதியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலர், அனைத்து அரசியல் கட்சியினர் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

முன்னதாக, இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் குஞ்சுமுகம்து, காங்கிரஸ் கட்சியின் சாஜ், சுல்பிகர் தாமஸ், திமுகவின் பாண்டியராஜ், ராஜேந்திரன், முருகையா, சின்னவர் மற்றும் பாஜகவின் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply