கோவை, ஜன. 12-
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறையளிக்கப்படாததற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு விழாவாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை (ஜன.12 முதல் ஜன.16) தொடர்ந்து ஐந்து நாட்கள் தமிழக அரசால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கேந்தரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. அதுவும், மாட்டு பொங்கல் தினமான திங்களன்று கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டுமென பள்ளி நிர்வாகத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பள்ளியின் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் மத்திய அரசின் சார்பில் 46 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நடத்தப்படுகின்றன. கோவையில் சவுரியபாளையம் மற்றும் சூலூர் ஆகிய இரண்டு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளிகளில் தசரா பண்டிகை, தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுவதை போல பொங்கல் விழாவை கொண்டாட வேண்டும். மாறாக, அன்றைய தினங்களில் விடுமுறை கூட அளிக்கப்படாதது வேதனை அளிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

மாணவர், வாலிபர் சங்கம் கண்டனம்:

இதற்கிடையே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட தலைவர் ஜே.ரவீந்திரன், செயலாளர் கே.எஸ்.கனகராஜ், பொருளாளர் சீலாராஜ் மற்றும் சந்திரசேகர் உள்ளிட்டோர் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றினை அளித்தனர். இதில் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் என்கிற ஒரே குடைக்குள் நின்று இயற்கையை வணங்கும் உன்னத திருவிழாவான பொங்கல் திருவிழாவிற்கு மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு விடுமுறையளிக்காதது கண்டிக்கத்தக்கது. ஆகவே, கோவை மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு மத்திய அரசு பள்ளிகளில் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறையளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் கூறப்பட்டிருந்தது.

இதேபோல், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ், செயலாளர் கேப்டன் பிரபாகரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய அரசின் பள்ளிகளான கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் மாட்டுப் பொங்கல் அன்று விடுமுறையளிக்காதது ஏற்புடையதல்ல. அதுவும், தமிழகத்திற்கு சம்மந்தமில்லாத குருகோவிந்சிங் பிறந்தநாள், மகாவீரர் ஜெயந்தி, ஜென்மாஸ்டமி, குரு நானக் பிறந்த நாள், கோவர்தன் பூஜா, புத்த பூர்ணிமா போன்ற நாட்களில் விடுமுறை அளிக்கப்படும் நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிக்கைக்கு விடுமுறை அளிக்கப்படாதது கண்டிக்கதக்கது. ஆகவே, தமிழக அரசுஉடனடியாக தலையிட்டு விடுமுறையை பொங்கல் பண்டிகைக்கு பெற்றுத்தர வேண்டும். இல்லையென்றால், திங்களன்று கேந்திரிய வித்யாலயா பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது குறித்து இந்திய மாணவர் சங்கம் முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.