கோபி. ஜன.12-
கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள மேட்டுவலவு அந்தியூர் சாலையில் எஸ்.சி.எம். என்ற தனியார் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் கம்பெனியில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணி நேரம் முடிந்து அனைத்து தொழிலாளர்களும் வெளியே சென்றுவிட்ட நிலையில் இரவு 10 மணியளவில் கட்டிடத்தின் மேற்புறத்தில் தீ எரிவதை அப்பகுதி மக்கள் கண்டனர். இதையடுத்து கோபி காவல்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபி தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியாததால் சத்தியமங் கலத்திலிருந்தும், அந்தியூரிலிருந்தும் கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இதன்பின் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்து முற்றிலும் அனைத்தனர். அதேநேரம், இந்த தீடீர் தீ விபத்தால் உள்ளாடை தயாரிப்புக்காக வைக்கப்பட்டிருந்த பனியன் துணிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே தீ விபத்து நடத்த பனியன் நிறுவனத்தில் கோபி கோட்டாட்சியர் கோவிந்தராஜன் மற்றும் வட்டாட்சியர் பூபதி ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும். இந்த விபத்து குறித்து கோபி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: