இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜனவரி 14இலிருந்து இந்தியாவிற்கு வருகைதர உள்ளார். அவருடைய அதிகாரபூர்வமான வருகை, வரவேற்கப்படக் கூடாத ஒன்றாகும். நெதன்யாகு தலைமையில் உள்ள கூட்டணி அரசாங்கமானது, இஸ்ரேல் இதுவரை பெற்றிருந்ததிலேயே மிகவும் மோசமான வலதுசாரி அரசாங்கமாகும். இக்கூட்டணி அரசாங்கத்தில் மிகவும் பிற்போக்குத்தனமான வலதுசாரி யூதர் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அவை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் பாலஸ்தீனர்களை வெளியேற்றவேண்டும் என்றும், இஸ்ரோல் எல்லைக்குள் வசிக்கின்ற அரேபியர்களை இரண்டாம்தர பிரஜைகளாகக் கருதிட வேண்டும் என்றும் வெளிப்படையாகவே கூறிவருகின்றன.

நெதன்யாகு அரசாங்கம், பாலஸ்தீனியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களைத் தங்களுச் சொந்தமானதென்று சட்டபூர்வமாக மாற்றியமைத் திருக்கின்றன. முன்பு அபகரிக்கப்பட்ட இடங்களில் அமைந்துள்ள குடியேற்றங்களை விரிவுபடுத்திக்கொண்டிருக்கிற அதே சமயத்தில், இருபது ஆண்டுகளுக்குப்பின்னர், வெஸ்ட் பேங்க்கில் புதிய குடியேற்றங்களைக் கட்டி எழுப்புவதற்கு அனுமதி அளித்திடவும் தீர்மானித்திருக்கிறது. இவை அனைத்தையும் புதியதொரு சுதந்திரமான பாலஸ்தீனம் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே செய்து கொண்டிருக்கின்றன.

நெதன்யாகு, இந்தியாவிற்கு வருகை தரும் இரண்டாவது இஸ்ரேல் பிரதமராவார். முதலாவது பிரதமர் ஏரியல் சாரன் (Ariel Sharon) 2003இல் பாஜக தலைமையிலான அரசாங்கம் இருந்தபோது வந்திருந்தார். இப்போதும், மோடி அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே நெதன்யாகு வந்துகொண்டிருக்கிறார்.

நெதன்யாகுவும், மோடியும் தத்துவார்த்தரீதியில்  நண்பர்களானவர்கள். ஒருவர், வலதுசாரி அதிதீவிர யூத தேசியவாதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்றால், மற்றவர் வலதுசாரி இந்துத்துவா தேசியவாதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துபவராவார். சென்ற ஆண்டு இஸ்ரேல் சென்ற முதல் இந்தியப் பிரதமரான மோடி, பாலஸ்தீனர்களின் கட்டுப்பாட்டில் அமைந்திருந்த வெஸ்ட் பேங்கிற்குச் செல்லாமல், இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த பகுதிக்குத் தன்னுடைய ஆதரவு உண்டு என்பதைத் தெளிவானமுறையில் சமிக்ஞை செய்திருந்தார்.

பாஜக அரசாங்கத்தின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டிற்கு முரணான விதத்திலேயே, இந்தியாவும், இந்திய மக்களும் பாலஸ்தீனப் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதற்கு எதிராகவும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவுமே எப்போதும் ஒருமைப்பாட்டுடன் இருந்து வந்திருக்கிறார்கள்.  இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக எண்ணம்கொண்ட மக்களால் இஸ்ரேலின் வன்செயல்மிகுந்த பாலஸ்தீன எதிர்ப்புக் கொள்கைகள் எதிர்க்கப்பட்டே வந்திருக்கின்றன என்பதை நெதன்யாகு தெரிந்துகொள்ள வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: